×

2015-17ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம்: மாஜி எம்பிக்கள், எம்எல்ஏ, மேயர், கவுன்சிலர் வரை பணம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

சென்னை: சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அதிமுக ஆட்சியில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 2 கட்டுமான நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்க, ஆக்கிரமிப்புகள் அகற்ற முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏ, மேயர், கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என ரூ.50 கோடி வரை லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பிரபல கட்டுமான நிறுவனம், அதன் மேலான் இயக்குநர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து 5 இடங்களில் நேற்று சோதனை நடத்தியது. இதில் லஞ்சம் பெற்றவர்களின் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னி மில் இயங்கி வந்தது. இந்த மில் தொழிலாளர் பிரச்னை காரணமாக மூடப்பட்டது. பிற்காலத்தில் அந்த இடம் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. பிறகு பின்னி மில் இருந்த இடத்தில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தி.நகரை சேர்ந்த லேன்ட் மார்க் அவுசிங் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் சென்னையை சேர்ந்த கே.எல்.பி. ப்ராஜக்ட் பிரைவேட் லிமிெடட் நிறுவனங்கள் முடிவு செய்தன. இதற்காக இந்த 2 கட்டுமான நிறுவனங்கள் சார்பில், பின்னி மில் நில உரிமையாளர் எம்.எஸ். பின்னியிடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை ரூ.490 கோடிக்கு வாங்கினர். பின்னர் அந்த இடத்தில் இந்த 2 நிறுவனங்கள் சார்பில் பிரமாண்ட கட்டுமானங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கட்டுமான பணி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பாக 2015 முதல் 2017 வரையான காலத்தில் நடந்தது. இதற்கிடையே பின்னி மில்லை வாங்கிய 2 நிறுவனங்களும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பின்னி மில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடக்கவும், அதற்கு அனுமதி பெற 2 கட்டுமான நிறுவனங்களும், அதிமுக ஆட்சியின்போது எம்பிக்கள், எம்எல்ஏ, மேயர், கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு ரூ.50 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்ட ஆவணங்களும் சிக்கியது.

அதேநேரம், கடந்த 2017ல் ராஜூ நாயுடு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பின்னி மில் பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சிஎம்டிஏவிடம் முன் அனுமதி கோர 2 கட்டுமான நிறுவன மேலாண் இயக்குநர் உதயகுமார், இயக்குநர்கள் சுனில் கேட்பாலியா, மனீஷ் பர்மர் ஆகியோர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சட்டவிரோதமாக அனுமதி பெற லஞ்சம் வாங்கிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 28.5.2019ல் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணையின்போது கிடைத்த தகவல்களை வருமான விரித்துறை துணை இயக்குநர் சங்கர்பாண்டியிடம், பெற்று விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2017 டிசம்பர் 15 மற்றும் 16ம் தேதி கணக்கில் வராத ரூ.50 கோடிகுறித்து வருமான வரித்துறை துணை இயக்குநர் சங்கர் பாண்டி பின்னி மில் பகுதியில் குடியிருப்பு கட்டிய தி.நகரை சேர்ந்த லேன்ட் மார்க் அவுசிங் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மேலாண் இயக்குநர் உதய குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பின்னி மில் நிலத்தை கே.எல்.பி. ப்ராஜக்ட் பிரைவேட் லிமிெட்ட இயக்குநர்கள் சுனில் கேட்பாலியா, மனீஷ் பர்மர் ஆகியோர் வாங்க முடிவு செய்து, பின்னி மில் உரிமையாளரிடம் 14.16 ஏக்கர் நிலத்திற்கு ரூ.490 கோடி விலை பேசி முடிக்கப்பட்டது. அதில் முன்தொகையாக உதயகுமார் ரூ.20 கோடி, சுனில் கேட்பாலியா, மனீஷ் பர்மர் ஆகியோர் ரூ.40 கோடி என மொத்தம் ரூ.60 கோடி ரொக்கமாக வழங்கினர். நிலத்தை வாங்குவதற்காக 2 நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.365 கோடி லோன் பெற்றது. பிறகு ரூ.490 கோடிக்கு விலை பேசி வாங்கிய நிலத்தை ரூ.370 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ.120 கோடி கணக்கில் காட்டாமல் ரொக்கமாக வழங்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உதயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதோடு, நிலம் அமைந்துள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. மேலும், நிலத்தை ஒட்டிய சாலை குறுகலாக இருந்ததால் சட்ட விதிகளின் படி பல மாடி குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 2 நிறுவனங்கள் சார்பில் கட்டுமான பணிகளுக்கு ஏதுவாகவும், தங்களுக்கு சாதகமாக பணிகளை சுமுகமாக முடிக்கவும் 50 கோடியே 86 லட்சத்து 125 ரூபாய் வரை 7 மக்கள் பிரதிநிதிகள், 2 அரசு அதிகாரிகள், 8 அரசு நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரி சங்கர் பாண்டியிடம் உதயகுமார் வாக்குமூலம் அளித்து இருந்தார். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கார்த்திகா அளித்த புகாரின் படி, ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்த மேலாண் இயக்குநர் உதயகுமார் மற்றும் இயக்குநர்கள் சுனில் கேட்பாலியா, மனீஷ் பர்மர் ஆகியோர் மீது நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை தி.நகர் 27வது தெருவில் உள்ள லேன்ட் மார்க் அவுசிங் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் மேலாண் இயக்குநர் உதயகுமார் வீடு, அதேபோல், புளியந்தோப்பு பட்டாளம் ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் அமைந்துள்ள கே.எல்.பி. ப்ராஜக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர்கள் சுனில் கேட்பாரியா, மனீஷ் பர்மர் ஆகியோர் அலுவலகம் என 5 இடங்களில் சோதனை நடந்தது. இதில் அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.50 கோடி லஞ்சம் பெற்ற அதிகாரிகள் குறித்த பட்டியல் மற்றும் வழக்கு தொடர்பான விபரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அசோக் பாபு தலைமையிலான குழுவினர் கே.எல்.பி. ப்ராஜக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர்கள் அலுவலகத்தில் இருந்து முறைகேடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனை முடிவில் அதிமுக ஆட்சியில் லஞ்ச பணம் யார் யாருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னணி குறித்து முழுமையாக தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிஎம்டிஏவில் பிளான் அப்ரூவல் கேட்டு அனுமதி கேட்டவுடன் அதிமுக ஆட்சியில் ஒரு மர்ம நபர் போன் செய்வார். சதுர அடிக்கு இவ்வளவு பணம் கொடுத்தால்தான், அந்த நிறுவன பைல் உயர் அதிகாரிகளின் மேஜைக்கு செல்லும். இது குறித்து யாரிடம் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்க முடியாது. அதன்படி சிஎம்டிஏ என்ற பெயரில் ரூ.8,99,33,000 வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் கட்சி நிதி என்று வழங்கப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட 2015 முதல் 2016 வரை சிஎம்டிஏ அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அதன்பின்னர் இந்த துறைக்கு துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக இருந்தார். அப்போதுதான் கட்சி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் அமைச்சருக்குத்தான் செல்லும். இதனால் பெயர் குறிப்பிடாமல் சிஎம்டிஏ என்று குறிப்பிட்டு சுமார் ரூ.9 கோடி வரை வாங்கியுள்ளதால், அப்போது பணம் வாங்கிய அமைச்சர்களாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post 2015-17ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம்: மாஜி எம்பிக்கள், எம்எல்ஏ, மேயர், கவுன்சிலர் வரை பணம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு appeared first on Dinakaran.

Tags : Binny Mill ,Chennai ,Pinny Mill ,Chennai Perambur ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...