×

விராலிமலையின் ஆன்மீக அடையாளம் அழிந்து வரும் அவலம் தேசிய பறவையை பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும்-பக்தர்கள், தன்னார்வலர்கள் வேண்டுகோள்

விராலிமலை : அழிந்து வரும் விராலிமலையின் ஆன்மீக அடையாளமான மயில்களுக்கு சரணாலயம் அமைத்து, தேசிய பறவையான பறவைகளை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விராலிமலையின் ஆன்மீக அடையாளமாக திகழ்வது அங்குள்ள அருள்மிகு முருகன் மலைக்கோயிலாகும். முருகனுக்கு வாகனமாக விளங்குவது மயில். இம்மலைக்கோயிலின் வனப்பகுதியை வாழ்விடமாக கொண்டிருந்த மயில்கள் அண்மைக்காலமாக அழிந்து, குறைந்து வருவது மயில் ஆர்வலர்களையும், பக்தர்களையும் வேதனையடைய செய்துள்ளது.திருச்சிக்கு அருகேயும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாகவும் விராலிமலை உள்ளது. ஊரின் மையத்தில் அமைந்துள்ள 207 படிகள் கொண்ட மலைக்கோயிலில் முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிப்பது இந்த கோயிலின் தனி சிறப்பு என்றால் இந்தியாவின் தேசிய பறவையான மயில்கள் இந்த மலையில் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக ஒருகாலத்தில் காணப்பட்டது என்பது மற்றொரு சிறப்பு.புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது விராலிமலை முருகன் மலைக்கோயில். பக்தர்களின் பெருமளவு காணிக்கையை ஈர்க்கப்பட்டு வரும் இந்த முருகன் கோயிலின் வருமானத்தைக் கொண்டே மாவட்டத்தின் பல்வேறு கோயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிக அபூர்வ பறவையான மயில்களை. இந்த மலைக் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளிநாடுவாழ் பக்தர்களும் மயில்களை தெய்வமாக வணங்கி செல்வார்கள்.சில சமயங்களில் இம்மயில் கூட்டம் மலையிலிருந்து இறங்கி சாலையோரங்களில் சுற்றித்திரிவதை அந்த வழியாக பேருந்துகளில் பயணிப்போர் அவற்றை வியப்பாக பார்ப்பதுண்டு. மழை வருவது மயிலுக்கு தெரியும் என்பது போல மேகக் கூட்டங்களை கண்டு சங்கேத ஒலி எழுப்பி தோகையை விரித்தாடும் மயில் கூட்டம் அவ்வப்போது இங்குள்ள மக்களின் கண்களுக்கு விருந்து படைக்கும்.ஆனால் இந்த நிலைமை அண்மைக்காலமாக வெகுவாக மாறி வருகிறது. ஆண்டு வருமானம் பல லட்சங்களை அள்ளித்தரும் இக்கோயிலில் ஒருகாலத்தில் அறநிலையத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு மிகச் சிறப்பாக மயில்களை பராமரித்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறை மயில்கள் மீது பாராமுகம் காட்டுவதோடு போதிய பராமரிப்பையும் நிறுத்திக்கொண்டது.இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சிலர் மயில்களுக்கு உணவு அளித்தும், அவ்வப்போது தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பியும் வருவார்கள். அதோடு கோயிலுக்கு வரும் பக்தர்கள் மயில்களுக்கு தானியங்களை உணவாக அளிப்பார்கள் இதுநாள்வரை அதை உண்டு அரை வயிற்று பசியை நிரப்பி வந்தன மயில்கள்.இந்நிலையில் கடந்த சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டும். திறக்கப்படுவது மாக இருந்ததால் பக்தர்கள் வருகை என்பது இம்மலைக்கோயிலில் அறவே குறைந்துவிட்டது. பக்தர்கள் அளிக்கும் உணவை மட்டுமே நம்பி இருந்த மயில்கள் சமீபகாலமாக உணவின்றி தவித்து வரும் சூழல் ஏற்பட்டது. மேலும் மலைப் பகுதி மரங்களில் பழங்களின் விளைச்சல் இல்லாததால் மயில்கள் உணவு தேடி மலைக்குள்ளிருந்து இறங்கி வயல்வெளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன.இவ்வாறாக மலையை விட்டு வெளியே வரும் மயில்கள் போக்குவரத்து நிறைந்த சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலையால் சில சமயம் வாகனங்களில் சிக்கி உயிரிழந்து விடுகிறது. அதோடு வயல்வெளிகளில் சுற்றித்திரியும் மயில்களை சில சமூக விரோதிகள் வேட்டையாடி உணவுக்கும், மருந்துக்கும் பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த பிரச்னை ஒருபுறம் என்றால் உணவிற்காக வரும் மயில்கள் குடியிருப்பு பகுதிக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் சிலர் மருந்து வைத்து சாகடிக்கும் நிலையும் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. விராலிமலை மலைக்குள் உள்ள வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான மயில்கள் இருந்த வந்த நிலையில் இன்று விரல்விட்டு எண்ணும் அளவுக்கு மயில்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.விவசாயிகளின் வேதனையை தீர்க்கவும், மலைக்கோயிலின் அடையாளத்தை வலுப்படுத்தவும், மலைக்குள் மயில்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழலை கட்டமைக்க வேண்டும். விவசாயத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மயில்களை மலைப்பகுதிக்கு மீண்டும் இடம் பெற செய்ய வேண்டும்.அதோடு அவைகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர், உணவு கிடைக்கும் நிலையை மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்று. அஷ்டமாசித்தி என்னும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை அக்கோயிலில் முருகன் அருணகிரிநாதருக்கு கற்றளியதாக கூறப்படும் வரலாற்று புகழ்மிக்க விராலிமலை மலைக்கோயின் ஆன்மிக அடையாளத்தை காப்பதுடன், நம் நாட்டின் தேசிய பறவையும், முருகனின் வாகனமாக பக்தர்கள் கருதி வணங்கும் மயில்களை காப்பாற்ற முடியும்.அதோடு விராலிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின், பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது….

The post விராலிமலையின் ஆன்மீக அடையாளம் அழிந்து வரும் அவலம் தேசிய பறவையை பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும்-பக்தர்கள், தன்னார்வலர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Viralimalaya ,VIRALIYMALAY ,Viralimalayas ,
× RELATED ஆடி மாதத்தையொட்டி விராலிமலையில்...