×

இடைக்கால பட்ஜெட் 2024

புதுடெல்லி: வருமான வரி வரம்பில் மாற்றம் இல்லை, வரி விகிதங்கள் எதுவும் மாறவில்லை, புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இல்லை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை, விவசாய கடன் தள்ளுபடி பற்றி வாய் திறக்கவில்லை, மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் இல்லை… மொத்தத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், வரும் 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். 10 ஆண்டு கால ஆட்சியை ஒன்றிய பாஜ அரசு நிறைவு செய்யும் நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக பாஜ அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது. எனவே, தேர்தலை குறிவைத்து, வருமான வரி வரம்பு உயர்த்தப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், நகர்ப்புற வீடு கட்டும் நிதி உதவி திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும், வேளாண் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் தரப்படும், பெண் வாக்காளர்களை கவர்வதற்கான சலுகைகள் இருக்கும் என பல்வேறு தரப்பினரும் இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்புகள் இருக்கும் என பெரிதும் எதிர்பார்த்தனர். இத்தகைய பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தனது டாப்லெட் மூலமாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே சொல்லப்பட்ட திட்டங்களும் இனி செய்யப்போவதாக கூறும் வாக்குறுதிகளுமே இருந்தன. அனைத்து தரப்புக்கும் ஏமாற்றத்தை அளித்த அந்த அறிவிப்புகளின் விவரம்: கடந்த 10 ஆண்டுகளில் அனைவரையும் உள்ளடக்கிய, மக்களை மையப்படுத்திய, பன்முகத்தன்மைக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டதன் மூலம், மக்களின் சராசரி வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருக்கிறது.

n வரும் நிதியாண்டில் அரசு ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு.
n வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பாண்டின் நடைமுறையே தொடரும்.
n இறக்குமதி வரி உட்பட நேரடி மற்றும் மறைமுக வரியிலும் எந்த மாற்றமும் இல்லை.
n விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்களை வாங்க உள்ளன.
n 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டும் வகையில், மேலும் பல மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
n ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
n தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பாக தனியார் முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதியம் உருவாக்கப்படும். 50 ஆண்டு வட்டியில்லா கடனுடன் இந்த தொகுப்பு நிதி நிறுவப்படும். இது நீண்ட காலத் தவணை மற்றும் குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் கடனுதவி வழங்கும்.

n நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
n இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடனாக ரூ.75,000 கோடி வழங்கப்படும்.
n தொழிற்சாலைகளையும், துறைமுகங்களையும் இணைக்கும் விதமான 3 முக்கிய பொருளாதார ரயில்வே வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்.
n மெட்ரோ ரயில் திட்டங்கள், நமோ பாரத் ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு அவை விரிவுபடுத்தப்படும்.
n தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.1.68 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
n விரைவாக பெருகி வரும் மக்கள்தொகை பெருக்கத்தால் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

n சுற்றுச்சூழலை பாதுகாக்க பொது போக்குவரத்து துறையில் எலக்ட்ரிக் பஸ்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும். மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், உற்பத்தி கட்டமைப்புகளுக்கான ஆதரவு நீட்டிக்கப்படும்.
n லட்சத்தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
n மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இது 5.8 சதவீதமாக உள்ளது.
n மீன்வளத்துறையை ஊக்குவிக்கும் வகையில், 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கங்கள் அமைக்கப்படும்.
n ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
n பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் 1 கோடி வரி செலுத்துவோர் பயன்பெறுவர்.
n ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள முழுயான பட்ஜெட்டில், வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கத்திற்கான விரிவான செயல் திட்டத்தை சமர்பிப்போம்.
n ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
n மகளிர் தொழில் முனைவோர் 30 கோடி பேருக்கு முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். சாமானிய மக்களுக்கும், சம்பளதாரர்களுக்கும் ஏமாற்றத்தை தரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்முறை ஒட்டுமொத்த மக்களையும் அதிருப்தி அடையச் செய்துள்ளார்.இது ஒன்றுமே இல்லாத பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

 

The post இடைக்கால பட்ஜெட் 2024 appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Madurai ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...