×

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் : அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ஒய்பிஎம் மற்றும் வெற்றி ஆகிய தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுக்களில், 2003ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கிய போதும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே தொடர்ந்து கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டுமெனவும், மீண்டும் கிளாம்பாகக்த்திற்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதே போல மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு தொடர்பான பிரச்சினையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த தயார் இருக்கிறோம். ரூ.400 கோடியில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தூரத்தை தவிர வேறு எந்த அசௌகரியமும் இல்லை.” என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது. எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் – அரசுத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் : அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Glampakkam bus terminal ,ICOURT ,Chennai ,Chennai High Court ,Government of Tamil Nadu ,Clambakk ,Southern Districts ,
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...