×

தலைமலை கண்ட தேவர் – மருதூர் யமக அந்தாதி

நன்றி குங்குமம் ஆன்மீகம்

பகுதி – 1

அருந்தமிழ் நூல்கள் பல. அவை ஒவ்வொன்றும் உருவானதே ஒவ்வோர் அற்புதமான வரலாறு. அந்த வகையில், ‘மருதூர் யமக அந்தாதி’ என்ற நூல் உருவான வரலாற்றையும் அதை உருவாக்கிய `தலைமலை கண்ட தேவர்’ எனும் பெரும் புலவர் வரலாற்றையும் பார்க்கலாம். திருநெல்வேலிக்கு அருகில், நெருங்கிய காட்டுப்பகுதி. அங்கு பலர் வாழ்ந்து வந்தார்கள். எதற்கும் அஞ்சாதவர்கள் அவர்கள். யாரும் அவர்களை எதிர்க்க முடியாது. எதிர்த்தால் அவ்வளவுதான்; அவர்கள் வாழ்வு முடிந்துவிடும். அவர்கள் செய்த தவப்பயனோ, தமிழன்னையின் கருணையோ தெரியாது. எதற்கும் அஞ்சாத அவர்கள் குடியில், ஒரு குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தை சிறுவயது முதலே, நல்லவர்களுடன் மட்டும் பழகி வந்தது.

அந்த நல்லவர்களிடம் இருந்த நற்குணங்களை அப்படியே தன் வாழ்வில் செயல்படுத்தி, நற்பண்புகள் நிறைந்த குழந்தையாக வளர்ந்து வந்தது. பிறந்தது முதல் வில் – அம்பு என எந்த ஆயுதத்தையும் தொடாமல், யாருடனும் சண்டைக்குப் போகாமல், சாதுக்களிடம் – அடியார்களிடம் மட்டுமே உறவு கொண்டிருந்த அக்குழந்தை, ‘‘கல் மனக்காரர்கள் கூடக் கசிந்துருகும்படியாக இனிமையான நல்வார்த்தைகளைப் பேச வேண்டும். சித்தத்தில் இருக்கும் சிவனைத் தியானித்து ஓயாமல் பாட வேண்டும். அதுதானே நம்மை வாழ்விக்கும் வழி! சிவபெருமானே! ஆண்டவனே!

இந்தப் பேறு வாய்க்குமா எனக்கு? தெய்வமே! நீதான் அருள வேண்டும்!’’ என வேண்டியது. அவ்வாறு நல்வழியிலேயே செயல்பட்டு வந்த அக்குழந்தை, இளம் சிறுவனாக ஆனது. ஒருநாள்… அந்த இளம் சிறுவர் பார்வையில் படும்படியாக தவமுனிவர் ஒருவர் போய்க் கொண்டிருந்தார். நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள், கனிவு பொங்கும் பார்வை, மென்மையான நடை – உடை பாவனைகள் ஆகியவற்றோடு போய்க் கொண்டிருந்த அந்தத் தவமுனிவரை, பார்த்தவர்கள் எல்லோரும்வணங்கினார்கள்.

அடியார்கள் பலர் அந்தத் தவமுனிவரைப் பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்த இளம் சிறுவர், முனிவரின் பின்னால் போய்க் கொண்டிருந்த அடியார்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார். தவமுனிவரின் பின்னால் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும், ஒருவர்பின் ஒருவராக முனிவரிடம், விபூதி பெற்றுக் கொண்டதும் விலகினார்கள். தவமுனிவரின் பின்னால் இளஞ்சிறுவர் மட்டும் நடந்து கொண்டிருந்தார். முனிவர் திரும்பிப் பார்த்தார்; ‘‘தம்பி! எங்கு வருகிறாய்? என்ன வேண்டும்?’’ எனக் கேட்டார்.

கைகளைக் குவித்தபடி பேசத் தொடங்கினார் இளம் சிறுவர்; ‘‘முனிவர் பெருமானே! அடியேன் உடலைப் பற்றிக்கவலைப்படவில்லை. இறப்பு என்பது, சட்டையை மாற்றுவதைப் போல; அவ்வளவுதான்! ஆனால் அதற்கு முன்னால், உயிருக்கு உறுதி வேண்டும். அந்த வழியைத் தாங்கள்தான், அடியேனுக்கு அருள வேண்டும்! இதைத் தான் இறைவனிடம் நாள்தோறும் வேண்டிவருகிறேன்.

வழிமுறையோடு, வழிபாடு செய்தால், வாழவைக்கும் வழிபிறக்கும். அந்த வழிகளில், இறைவனைத் துதித்துப் பாடிப் பரவுவதே உயர்ந்தது எனப்பலர் சொல்ல, அடியேன் கேட்டு இருக்கிறேன். உத்தமமான அந்த வழியைத் தாங்கள்தான் அடியேனுக்கு உணர்த்தி அருளவேண்டும். எப்படிப் பாடுவது என்று சொல்லிக் கொடுத்து, அடியேனுக்கு அருள்புரிய வேண்டும்!’’ என்று வேண்டி, முனிவரின் திருவடிகளில் தன் தலை படும்படியாக வணங்கினார் இளஞ்சிறுவர்.

முனிவர் பார்த்தார்; ‘‘வழி பிறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், நான் சொல்லிக் கொடுக்கும் மந்திரத்தை உரு ஏற்று! இறைவன் அருளால் உன் எண்ணம் நிறைவேறும்’’ என்று சொல்லி; திருவைந்தெழுத்தை – பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்தார் முனிவர். உபதேசம் முடித்த முனிவர், தன் வழியே போய்விட்டார்.

இளஞ்சிறுவர், மந்திரத்தை உருவேற்றத் தொடங்கினார். நாளாக நாளாக உள்ளத்தில் ஒளி பிறந்தது. அமைதி தவழ்ந்தது. இறைவனுடைய திருவருள் முழுமையாக அவருக்குள் பதிந்தது. புலமை பெருக் கெடுத்தது. இளஞ் சிறுவரின் எண்ணம் பலித்தது. வாயைத் திறந்தால், பக்திப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடிவந்தன. எல்லோரும் அவரைப் ‘புலவர்’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள். (நாமும் புலவர் என்றே பார்க்கலாம்).

இதற்கிடையில், ‘‘வந்தேன்! வந்தேன்!’’ என்று திருமணப் பருவம் வந்தது. ஆம்! புலவர் திருமணப் பருவத்தை அடைந்தார். உறவிலேயே மரகதம் என்ற பெண்ணைப் புலவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். புலவரின் மனைவி பெயருக் கேற்றாற்போல மரகதமாகவே இருந்தாள். அழகு, அன்பு, நல்லறிவு, நல்லொழுக்கம், அடக்கம் – ஆகியவற்றில் தலை சிறந்தவளாக இருந்தாள். மரகதத்திற்குக் கூடப் பிறந்தவர்கள், அதாவது சகோதரர்கள் ஏழு பேர்கள் இருந்தார்கள்.

அந்த ஏழுபேர்களும் ‘கன்னம்’ வைத்துக் கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். பொருட்களைக் களவாடுவது, உல்லாசமாக வாழ்வது என்பதே அவர்கள் தொழில். அவர்களின் தொழிலைப் பற்றியோ, அவர்களைப் பற்றிய எண்ணமோ இல்லாமல் இருந்தார், புலவர். எந்த நேரமும் சிவபெருமானைப் பற்றிப்பாடுவது, மந்திரஜபம் செய்வது என்றே வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

குடும்ப வாழ்க்கை நடந்தாக வேண்டுமே! கணவரின் போக்கு அறிந்த மரகதம், அவரைத் தொல்லை செய்யாமல், பிறந்த வீட்டிலிருந்து சீதனப் பொருட்களாக வந்தவைகளை ஒவ்வொன்றாக விற்றுவிற்று, ஒருவாறு குடும்பத்தை நடத்தி வந்தாள். எவ்வளவு நாட்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும்? வீட்டில் இருந்த பொருட்கள்எல்லாம் தீர்ந்துபோயின.

மரகதம் மனம் கலங்கினாள். அண்ணிகள், அவர்களால் இயன்றதை அவ்வப்போது ஏதோ உதவினார்கள். பல இடங்களிலும் கடன்பட்டாள் மரகதம். நாளாகநாளாகக் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். மரகதம், பல வகையிலும் வருந்தினாள்.

இது கண்டு புலவர் உள்ளம் வருந்தி, மனைவிக்கு ஆறுதல் கூறினார். ‘‘மரகதம்! பக்குவம் அறிந்து பரமன் காப்பாற்றுவார். பயப்படாதே!’’ என்றார். அவ்வளவு காலம் அமைதியாக இருந்த மரகதம், ‘‘சுவாமி! என் அண்ணன்மார்களுக்கு எல்லாம் வழிகாட்டும் தெய்வம், நமக்கு மட்டும் வழிகாட்ட மறந்துவிட்டதோ?’’ எனக் கேட்டாள். புலவர் கொதித்தார்; ‘‘சீ!சீ! திருடுவதெல்லாம் ஒரு தொழிலா? கல்லிற்குள் இருக்கும் தேரைக்கும் உணவளித்துக் காப்பாற்றும் கடவுள், நம்மைக் கைவிடமாட்டார். கலங்காதே நீ!’’ என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னார். என்ன சொல்லி என்ன செய்ய? வயிற்றைப் பசி வாட்டும் போது உபதேசமா உதவிசெய்யும்?

ஒருநாள்… ஏழு மைத்துனர்களும் புலவரைத்தேடி வந்தார்கள். ‘‘மைத்துனரே! உங்கள் ஞானம், பக்தி, பாடல் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வையுங்கள்! பிழைக்கும் வழியைப் பாருங்கள்!’’ என்று குத்தலாகச் சொன்னார்கள். ‘‘பிழைக்கும் வழியா? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்! அது உங்கள் வழியாக இருக்கக் கூடாது. தெரிகிறதா?’’ என்றார் புலவர். மைத்துனர்கள் ஏழு பேர்களும் வாயை மூடிச் சென்றுவிட்டார்கள். மரகதம் மனம் கலங்கினாள்.

புலவர், ‘‘சிவபெருமானே! வயிற்றுப் பசி பாடாய்ப் படுத்துகிறது. மனைவி குமுறுகிறாள். ஏழை என் நிலை. அது ஏன் உனக்குத் தெரியவில்லை? ஆ! உனக்கா தெரியாது! மன்னித்து விடு! மன்னித்து விடு!’’ என்று கண்ணீர் சிந்தி உருகிப்பாடி வேண்டினார். உள்ளம் உருக அப்போது பாடிய பாடல்களே மிகவும் புகழ் பெற்ற ‘மருதூர் யமக அந்தாதி’ என அழைக்கப்படுகிறது. தன் மனக்குறையெல்லாம் கொட்டியப் புலவர், சிவபெருமானைத் துதித்துப் பாடிய அருந்தமிழ்ப் பாடல்கள் நிறைந்த நூல் அது. (அபூர்வமான அந்த நூலில் இருந்து சில பாடல்கள் பிற்பகுதியில் இடம் பெறும்) இறைவனுடைய எண்ணம், புலவருக்கு மட்டுமல்ல; அவர் மைத்துனர்கள் ஏழு பேர்களுக்கும் சேர்த்து அருள் புரியும் விதமாக இருந்தது. சில நாட்களாயின.

மனைவியை அழைத்தார் புலவர்; ‘‘மரகதம்! வேறு வழியே தோன்றவில்லை. இன்று அமாவாசை! கூப்பிடு உன் சகோதரர்களை! அவர்களுடன் சேர்ந்து நானும் திருடத்தான் போக வேண்டும். இதை அவர்களிடம் சொல்லிவிடு!’’ என்று தன் முடிவைச் சொன்னார். மரகதம் உடனே போய்த் தன் சகோதரர்களிடம் தகவலைச்சொல்லித் திரும்பினாள். வேறு வழி? இரவு எட்டு மணியானது. மைத்துனர்கள் ஏழு பேர்களும் வந்தார்கள்.

‘‘ச்ச! விதி விளையாடுகிறது. தெய்வமும் சோதித்தால் நான் என்ன செய்வேன்?’’ என்று சொல்லியவாறே எழுந்தார் புலவர்; சிவபெருமானைத் தியானித்துப் பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்தபடி, கள்வர்களான மைத்துனர்கள் பின்னால் நடக்கத் தொடங்கினார் புலவர். புலவரையும் அழைத்துக் கொண்டு மைத்துனர்கள் திருடப்போன இடம், திருப்பூவனம்.

திருப்பூவனம் எனும் அந்த ஊரில், பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். பொன்னும் மணியும் அவர் வீட்டில் நிறைந்திருந்தன. பெரும் பணக்காரரான அவர், பக்தியிலும் தலைசிறந்தவராக இருந்தார். தமிழிலும் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். அதன் காரணமாக, நாள் தோறும் சிவபெருமான் மீது ஒரு பாடல் எழுதிப்பாடி விட்டுத்தான் தூங்கச் செல்வார், அந்தப் பணக்காரர்.

பன்னிரண்டு ஆண்டுகளாக அந்தப் பழக்கத்தை மேற்கொண்டு இருந்தார், அவர். அவர் வீட்டில் கொள்ளை அடிப்பதற்காகத் தான், ஏழு கள்வர்களும், புலவரை அழைத்துக் கொண்டு சென்றார்கள். அவர் வீட்டைக் கள்வர்கள் நெருங்கிய நேரம், பணக்காரர்; ‘‘தலையில் இரந்து(உ)ண்பான் தன் உடலிற் பாதி மலை மகளுக்கு ஈந்து மகிழ்வான் – உலையில்…’’ என்பது வரை சொல்லி நிறுத்தினார்.

(தொடரும்..)

The post தலைமலை கண்ட தேவர் – மருதூர் யமக அந்தாதி appeared first on Dinakaran.

Tags : God ,Thalimalai ,Marudhur Yamaka Anthadi ,Talaimalai Kanda Devar ,Talaimalai ,Yamaga ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…