×

வியாபாரம் செழிக்க வைக்கும் ஓட்டைப் பிள்ளையார்

மங்கலம்பேட்டை

வனதுர்க்கையான மங்களநாயகியம்மன் கோயில் கொண்டதால் இந்த ஊர் மங்கலம்பேட்டை என்றானது. இந்த ஊரை மையமாக கொண்டு ஏராளமான கிராமங்கள் உள்ளன. மங்களநாயகியே சுற்று வட்டார கிராம மக்களைக் காக்கும் கடவுள். இவளை ஏராளமான சித்தர்கள் வணங்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். முகாசாபரூரில் கோரக்கர், கோனாங்குப்பத்தில் வீரமா முனிவர், பாலி சிவன் கோயில் முன்பு ஒரு சித்தர், கர்னத்தம் விநாயகர் கோயில் முன்பு ஒரு சித்தர் என இப்பகுதியில் சித்தர்களின் ஜீவசமாதிகள் ஏராளமாக உள்ளன.

இன்றும் கர்னத்தம் கற்குளக்கரையில் சித்தர் மண்டபங்கள் உள்ளன. இந்த வரிசையில் மங்கலம் பேட்டை வள்ளலார்தெருவில் ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது. அதை ஓட்டைப் பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். இந்த பிள்ளையார் இங்கு கோயில் கொண்டது குறித்து ஆச்சர்யமூட்டும் தகவல்கள் உள்ளன. வெட்டவெளி சுற்றி கல் பலகைகள் குடைகவிழ்த்தார் போல நான்கைந்து ஒதியமரம். நடுவே கல் பிள்ளையார். இவரை யார் பிரதிஷ்டை செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

தனக்கு எதிரே நிற்கும் மங்களநாயகி அம்மன் கோயில் தேரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த இவருக்கு ஆதவன், தன் கிரணங்களால் ஒளி அபிஷேகம் செய்ய, ஒதிய மரம் இலைகளால் அர்ச்சனை செய்தது. சிறுவர்கள் அந்த மரப்பலகையை தாண்டி குதித்து உள்ளே போய் விளையாடினார்கள். கடைத்தெருவில் மூட்டை தூக்கியவர்கள் உச்சிப் பொழுதில் மரத்தடியில் கொஞ்சநேரம் கண்மூடி ஓய்வெடுத்தனர்.

அங்கு விளையாடிய பிள்ளைகள் படிப்பில் சுட்டியானார்கள். ஓய்வெடுத்த உழைப்பாளிகள் புத்துணர்வு பெற்றார்கள். மனசளவில் குறைகளை எண்ணியபடி கண்ணயர்ந்தவர்கள் கொஞ்சநாளில் குறைகள் நீங்கியது எண்ணி வியந்தார்கள். இந்த பிள்ளையார்தான் ஏதோ செய்கிறார் என்றும் இந்த இடத்தில் ஏதோவொரு சக்தி உள்ளது என்றும் பலனடைந்தவர்கள் எல்லாம் பேச, இந்த பிள்ளையார் சாதாரண பிள்ளையார் அல்ல; ஒரு மகானால் ஆராதிக்கப்பட்டவர், அந்த மகான் இந்த இடத்திலேயே சமாதியாகியுள்ளார் என்பது அடுத்தடுத்துத் தெரியவந்தது.

அதன் பிறகு கடையை திறக்க வரும் வியாபாரிகள் சாவியை இந்த விநாயகர் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகு கடையை திறக்க, வியாபாரம் சூடு பிடித்தது. வெளியூர் செல்லும் பயணிகளும் தமது வேண்டுகோளை இவரிடம் சமர்ப்பித்துச் செல்ல, அத்தனையும் ஜெயமானது. இதனால் பக்தர்களின் ஒத்துழைப்போடு அழகிய ஆலயம் உருவானது.

கோயிலுக்கு விமானம் கட்ட திட்டமிட்டபோது `நான் முன்போலவே இருக்க விரும்புகிறேன். காற்றும், மழையும், வெயிலும் படும்படியாக, எப்போதும் பக்தர்கள் என்னைக் காணும் விதமாக சுற்றி சுவர் இல்லாமலும் மேலே விதானம் மூடாமலும் இருக்கவேண்டும்’ என விநாயகர் கனவில் வந்து கூறினாராம். அதன்படி விதானத்தில் விநாயகருக்கு நேராக மேலே வட்டமாக, பெரிய ஓட்டை போன்று இடைவெளிவிட்டு கட்டினார்கள். சுற்றிலும் கல் சுவர் எழுப்பாமல் கப்பிச் சுவர் அமைத்தார்கள். இவர் அன்று முதல் ஓட்டைப் பிள்ளையார் ஆனார்.

இந்த ஆலய கும்பாபிஷேகத்தில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் கலந்து கொண்டதை பெருமையுடம் பக்தர்கள் நினைவு கூர்கிறார்கள். வெட்டவெளியில் கோயில் கொண்ட பிள்ளையார், தமக்கு அருகே மேலும் சிலரை அமர்த்திக் கொள்ள விரும்பினார். இன்று இந்த விநாயகர் சந்நதிக்கு அருகே நவகிரக சந்நதி, வள்ளலார் கோயில், ஐயப்பன் கோயில், பெருமாள் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. வாரத்தின் ஏழுநாட்களும் இங்கு விசேஷம்தான்.

இன்றும் இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு திருமணம் போன்ற விசேஷங்களுக்கான பத்திரிகையை ஓட்டைப் பிள்ளையாருக்கு முதலில் வைத்து அழைத்த பின்னரே, தங்கள் சொந்த பந்தங்களுக்கு தருகிறார்கள். கருவறையில் அழகாய் வீற்றிருக்கும் இந்த கரிமுகனின் அருளோடு இங்கு சூட்சுமமாய் அமர்ந்திருக்கும் மகானின் அன்பும் இங்கு வருபவர்களின் வாழ்வில் வளங்களை எல்லாம் தந்து அருள்கின்றன! மகானின் அருள் பொங்கும் இத்தலம் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் மங்கலம் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது.

தொகுப்பு: அருள்ஜோதி

The post வியாபாரம் செழிக்க வைக்கும் ஓட்டைப் பிள்ளையார் appeared first on Dinakaran.

Tags : Otai Pillaiyar ,Mangalampet ,Mangalanayakyamman ,Mangalanayake ,Siddhas ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்