×

அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டுமான நிறுவன அதிபர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டுமான நிறுவன அதிபர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 இடங்களில் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கட்டுமான தொடர்பான லேண்ட் மார்க் ஹவுசிங் நிறுவனம், கே.எல்.பி. நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வருமான வரித்துறை சோதனை செய்தபோது லேண்ட் மார்க் ஹவுசிங் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் உதயகுமார், லஞ்சம் பெற்றவர்கள் குறித்து பட்டியலுடன் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது விரிவான விசாரணையை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையை 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 2019-லஞ்ச ஒழிப்புத்துறை முதல்கட்ட விசாரணையை தொடங்கிய நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் லஞ்சம் கொடுத்த லேண்ட் மார்க் ஹவுசிங் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் உதயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கே.எல்.பி. நிறுவன இயக்குனர் சுனில் கேட்பாலியா, மணீஷ் பார்மர் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ல் பின்னி மில்லின் 14.16 ஏக்கர் நிலத்தை ரூ.490 கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்து ரூ.370 கோடிக்கு வாங்கியுள்ளார். எஞ்சிய ரூ.120 கோடி ரொக்கமாக நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டுமான நிறுவன அதிபர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,Anti-Corruption Department ,CEO ,Dinakaran ,
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!