×

நடிகர்களை அறிமுகப்படுத்தும் கட்சி நாட்டை ஆளுகிறது சில்லுவண்டுக்கு எல்லாம் பதில் கூறி பெரிய பிம்பங்கள் தர விரும்பவில்லை: பாஜவை வறுத்தெடுத்த நத்தம் விஸ்வநாதன்

நிலக்கோட்டை: ‘தேசிய கட்சி என கூறிக் கொண்டு விளம்பரங்களில் வருவது போல புதுப்புது நடிகர்களை அறிமுகப்படுத்தும் கட்சி தான் இன்று ஒன்றியத்தை ஆளுகிறது. ஊர் ஊராக நடைபயணம் மேற்கொள்ளும் அரசியல் தெரியாத சில்லுவண்டுக்கு எல்லாம் பதில் கூறி அவர்களுக்கு பெரிய பிம்பங்கள் தர விரும்பவில்லை’ என அண்ணாமலையை மறைமுகமாக தாக்கி நத்தம் விஸ்வநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே வக்கம்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ பேசியதாவது: ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டாட்சி தத்துவத்தை கண்டுகொள்வதில்லை. மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு ஒரு நன்மையும் செய்ததாக வரலாறு கிடையாது. மாநில அரசுகளை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. அவர்களுக்கு வாக்களிப்பதற்காக மாநில கட்சிகளின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது. மாநில கட்சிகளை ஒட்டுண்ணியாக பயன்படுத்தி அவர்கள் மட்டுமே பயனடைகின்றனர். நாம் பலியாக்கப்படுகிறோம். இதனால் கூட்டணியில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன. கூட்டணியில் இருந்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள். ஆட்சியில் இருந்தாலும் நசுக்கப்படுகிறோம்.

அதிமுகவை இதோடு காலி செய்து விடலாம் என நினைத்து ஊர் ஊராக நடைபயணம் மேற்கொள்ளும் அரசியல் தெரியாத சில்லுவண்டுக்கு (அண்ணாமலை) எல்லாம் பதில் கூறி அவர்களுக்கு பெரிய பிம்பங்கள் தர விரும்பவில்லை. தேசிய கட்சி என கூறிக் கொண்டு விளம்பரங்களில் வருவது போல புதுப்புது நடிகர்களை அறிமுகப்படுத்தும் கட்சி தான் இன்று ஒன்றியத்தை ஆளுகிறது. தோழமை உணர்வின்றி கூட்டணி தர்மத்தை மதிக்காமல் அலப்பறைக்காக வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி ஆலமரத்தை அசைத்து பார்க்க நினைத்தனர். ஒன்றியத்தில் மோடி பிரதமர் என்றார்கள் ஏற்றோம். மாநிலத்தில் எடப்பாடி முதல்வர் என்பதை ஏற்க மறுத்து ஆளாளுக்கு தாங்கள் தான் என்ற நினைப்பில் பேசி வந்தனர். ஒன்றிய அரசு தொடர்ந்து நாட்டு மக்களின் உரிமைகளை பாதிக்கக்கூடிய திட்டங்களை கொண்டு வந்ததாலும், தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து தமிழக மக்களின் நலனை காவு கொடுக்கும் நிலை ஏற்பட்டதாலும், நமது பிரச்னைகளுக்கு நாமே தீர்வு கண்டு கொள்ளலாம் என பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

* ஒன்றியத்தில் மோடி பிரதமர் என்றார்கள் ஏற்றோம். மாநிலத்தில் எடப்பாடி முதல்வர் என்பதை ஏற்க மறுத்து ஆளாளுக்கு தாங்கள் தான் என்ற நினைப்பில் பேசி வந்தனர்

The post நடிகர்களை அறிமுகப்படுத்தும் கட்சி நாட்டை ஆளுகிறது சில்லுவண்டுக்கு எல்லாம் பதில் கூறி பெரிய பிம்பங்கள் தர விரும்பவில்லை: பாஜவை வறுத்தெடுத்த நத்தம் விஸ்வநாதன் appeared first on Dinakaran.

Tags : Silluvandu ,Natham Viswanathan ,BJP ,Nilakottai ,Union ,Silvanut ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...