×

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க சில வாரங்கள் அனுமதிக்க முடியுமா: தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: . சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ஒய்பிஎம் மற்றும் வெற்றி ஆகிய தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுக்களில், 2003ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கிய போதும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே தொடர்ந்து கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண், கடந்த 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு இரு நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரக்கணக்கான பள்ளி வாகனங்கள், தனியார் நிறுவன வாகனங்கள் இயக்கப்படும்போது தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்?. எனவே, இந்த வழக்கு முடியும் வரை தனியார் பேருந்துகளை கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பதிலளித்து வாதிடும்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் கோயம்பேடு மற்றும் தாம்பரம் செல்ல 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் காலை நேரத்தில் இயக்கப்படுகிறது. இந்த வசதிகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் ஆரம்பிக்கும்போதும் இதே பிரச்னைதான் ஏற்பட்டது. வாகன நிறுத்தம், கடைகள், மருத்துவமனை என அனைத்து வசதிகளும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, தென் மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கலாமே என்று அட்வகேட் ஜெனரலிடம் கூறினார். அதற்கு, இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் கோரினார். இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

The post தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க சில வாரங்கள் அனுமதிக்க முடியுமா: தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,High Court ,Tamil Nadu government ,Chennai ,Commissioner ,Klambach, Chennai ,YPM ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...