×

புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயல்பட வாய்ப்பு குறைவு: பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு குறைவு என பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டு முதல் பரவ தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து இன்றைய தேதி வரை பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்டு என்ற 2 தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்தது. அதனடிப்படையில் கிட்டத்தட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளது, மேலும் பலர் கிட்டதட்ட 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கொரோனா தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக செயல்படாது என தெரியவந்துள்ளது. “இந்தியாவில்- தமிழ்நாட்டில் இரண்டு கொரோனா அலைகள் மூலம் மக்கள்தொகை அளவிலான செரோ பிரேவலன்ஸுக்கு தொற்று மற்றும் தடுப்பூசியின் பங்களிப்பு” என்ற தலைப்பில் பொதுசுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அக்டோபர் 2020 மற்றும் மே 2021ம் வரை தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக நடைபெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் கிட்டத்தட்ட 20,000 நபர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். செரோ பிரவலன்ஸ் என்பது ஒரு வைரஸ் அல்லது ஒரு நோயால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் தொகையில் எத்தனை நபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே ஆகும்.

இந்த ஆய்வுகளின் முடிவில், இந்தியாவின் முதல் கொரோனா அலைக்குப் பிறகு, முதல் கட்ட ஆய்வில் (அக்டோபர்-நவம்பர் 2020) மாநில அளவிலான செரோ பிரவலன்ஸ் 31.5 சதவீதமாக இருந்தது. 2வது கட்ட ஆய்வில் (ஏப்ரல் 2021) செரோ பிரேவலன்ஸ் 22.9% ஆகக் குறைந்தது, 3வது கட்ட ஆய்வில் (ஜூன்-ஜூலை 2021) செரோ பிரேவலன்ஸ் 67.1% ஆக உயர்ந்தது, டெல்டா வகை கொரோனா பரவியதால் இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 4 ம் கட்ட ஆய்வு (டிசம்பர் 2021ஜனவரி 2022) செரோ பிரேவலன்ஸ் 93.1% ஆக உயர்ந்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் செரோ பிரேவலன்ஸ் தொடர்ந்து அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா அல்லது எதிர்காலத்தில் வரும் கொரோனாவுக்கு எதிராக செயல்படுவது குறைவு என பொது சுதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொது சுதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் செலுத்திய கொரோனா தடுப்பூசி புதிய வகை கொரோனா அல்லது எதிர்காலத்தில் வரும் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக செயல்படுவது குறைவு. இருப்பினும் அது பல வகையான நோய்க்கு எதிராக செயல்படும். மேலும் இது போன்ற தாக்கம் குறைவாக உள்ள கொரோனா உருமாற்றத்திற்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய்க்கான அறிகுறி இருந்தால்ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

The post புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயல்பட வாய்ப்பு குறைவு: பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,Chennai ,department ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...