×

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜ தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்ட வழக்கில் பாப்புலர் பிரன்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை வழங்கிய பெண் நீதிபதி ஸ்ரீதேவிக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பாஜ பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவரான ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கடந்த 2021ம் ஆண்டு வீடு புகுந்து தாய், மனைவி, மகள் கண்ணெதிரே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிரன்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மாவேலிக்கரை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, கைது செய்யப்பட்ட 15 பேருக்கும் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். கேரளாவில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீதேவிக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்து அவர் ஆலப்புழா மாவட்ட எஸ்பிக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி ஸ்ரீதேவிக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

The post பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Thiruvananthapuram ,Sridevi ,STBI ,Ranjith Srinivasan ,Kerala ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு