×

உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது: கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டனர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டனர். அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என்ற வகையில், அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற அடிப்படையில், ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில் நேற்று தொடங்கியது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 37 மாவட்ட கலெக்டர்கள் கிராமங்களுக்கு நேற்று காலை 9 மணிக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். கலெக்டர்கள் நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை 24 மணி நேரம் கிராமங்களிலேயே தங்கி மக்கள் குறைகளை கேட்டு, உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கலெக்டர்களுக்கு உதவியாக மாவட்ட அளவிலான வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் கிராமங்களில் தங்கி இருந்து மக்கள் குறைகளை கேட்டனர். முகாம் நடைபெறுவது குறித்து அனைத்து கிராமங்களிலும், மாவட்ட ஆட்சி தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த முகாம் நடைபெறும். அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது: கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Chief Minister ,M.K.Stall ,District ,
× RELATED பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.410.73...