×

மேற்கு வங்கத்தில் நீதி யாத்திரை ராகுலின் கார் மீது கல் வீசி தாக்குதல்?: கண்ணாடி உடைந்து நொறுங்கியது

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் பிரேக் போட்டதால் கண்ணாடி உடைந்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். பீகார் சென்றிருந்த ராகுலின் நீதி யாத்திரை நேற்று மீண்டும் மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து மால்டா மாவட்டத்தின் ஹரிஸ்சந்திராப்பூர் பகுதியில் ராகுல் காரில் சென்றபோது மறைந்திருந்த மர்மநபர்கள் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் காரின் கண்ணாடி உடைந்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து கட்சியின் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘ராகுல் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில்,‘‘மால்டாவில் ராகுலை சந்திப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென ராகுலை சந்திப்பதற்காக அவரது கார் முன் வந்தார். இதனால் திடீரென பிரேக் பிடித்து கார் நிறுத்தப்பட்ட நிலையில் கார் கண்ணாடி உடைந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ராகுல் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜ உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து திரிணாமுல் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,\\”காங்கிரஸ் மாநில தலைவரிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அவர் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானவர் என்பது எங்களுக்கு தெரியும். இந்த கல்வீச்சு சம்பவத்துக்கு பின் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கக்கூடும். இதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை உருவாக்க முயற்சிக்கிறார்கள்”என்றார்.

* பீகாரில் தான் தாக்குதல்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,‘‘ ராகுல்காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிந்தேன். நான் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தேன். தாக்குதல் சம்பவம் பீகாரின் கதிஹாரில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை. கார் கண்ணாடி உடைந்த நிலையில் கார் மேற்கு வங்கத்தில் நுழைந்துள்ளது. தாக்குதல் கண்டனத்துக்குரியது. இது வேறு ஒன்றுமில்லை. நாடகம் தான்” என்றார்.

The post மேற்கு வங்கத்தில் நீதி யாத்திரை ராகுலின் கார் மீது கல் வீசி தாக்குதல்?: கண்ணாடி உடைந்து நொறுங்கியது appeared first on Dinakaran.

Tags : Justice Yatra ,West Bengal ,Malda ,Congress ,president ,Rahul Gandhi ,Adhir Ranjan Choudhary ,Rahul ,Neeti Yatra ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...