×

ஈரோடு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து டிரைவர், நடத்துனர் தர்ணா

ஈரோடு: ஈரோட்டில் போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளரை கண்டித்து டிரைவர் மற்றும் நடத்துனர் நேற்று நள்ளிரவு தர்ணாவில் ஈடுபட்டனர். ஈரோடு-சென்னிமலை ரோட்டில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு கிளை பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த கிளைக்குட்பட்ட கோவை-சேலம் வழித்தட பேருந்தில் ஈரோட்டைச் சார்ந்த பஸ் டிரைவர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட நிலையில், 2 பேரையும் மீண்டும் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அவர்கள் உடல் நிலை மற்றும் வேலை நேரத்தை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிளை மேலாளார் அவர்களை அவதூறாக பேசியதுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து டிரைவர் செந்தில்குமார், நடத்துனர் வடிவேல் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து பணிமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையறிந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 2 பேரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து டிரைவர், நடத்துனர் கூறுகையில், அதிகாலை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம். எங்களின் தூக்கம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் எங்கள் மீது அதிக பணிச் சுமையை சுமத்துவது விபத்துக்கு வழிவகுக்கும். இது எங்களை மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. எங்களை நம்பி பேருந்தில் வரும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே, இத்தகைய போக்கை மாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post ஈரோடு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து டிரைவர், நடத்துனர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : dharna ,Erode Transport Corporation ,Erode ,Erode transport ,State Transport Corporation ,Erode-Shennimalai road ,Coimbatore-Salem ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மாநில...