×

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (புதன்) காலை நடந்தது. இதில் கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார், கோயில் முன்மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிமரத்தில் கொடியேற்றி வைத்தார்.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் காலை, மதியம் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தை அமாவாசை விழா தொடங்கியதையடுத்து தினசரி காலை மற்றும் இரவு சுவாமி விசேஷ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.முக்கிய நிகழ்வான தை அமாவாசை திருவிழா பிப்.9ம்தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.

அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 10ம்தேதி சனிக் கிழமை காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தல் தாகசாந்தி, இரவு 10 மணிக்கு மேல் சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சி நடக்கிறது.

11ம்தேதி தை அமாவாசை திருவிழா நிறைவு விழா நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலிலைச் சயனம் மங்கள தரிசனம் நடக்கிறது. தை அமாவாசை திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

The post ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Thai New Moon Festival ,Eral Chairman Arunachal Swamy Temple ,Eral Chairman Arunachal Swamy Temple Tai Amavasai festival ,Eral ,Chairman Arunachal Swamy Temple ,Thoothukudi district ,Thai ,Eral Chairman ,Arunachala ,Swami temple ,
× RELATED தை அமாவாசை விழா