×

எங்களுக்கு அடிப்படை ஆதரவு கொடுங்கள் !

நன்றி குங்குமம் தோழி

கும்மிப் பாட்டு கலைஞர் மேகி

‘‘திருநங்கைகள் தங்களுக்கு என்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுயதொழில்களில் ஈடுபட வேண்டும்’’ என்கிறார் மதுரையை சேர்ந்த கும்மிப் பாட்டு கலைஞரான திருநங்கை மேகி. பல கோயில்களுக்கு சென்று கும்மிப் பாட்டு கச்சேரிகளை நடத்தி வரும் இவர் திருநங்கைகளுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘என் ஊர் மதுரையில் உள்ள முனிச்சாலை. எனக்கு சின்ன வயசுல இருந்தே பெண் தன்மை இருப்பது தெரிய வந்தது. வெளியே சொன்னால் கேலி, கிண்டல் செய்வார்கள், வீட்டில் திட்டுவார்கள் என சில காலம் அதை மறைத்துக் கொண்டிருந்தேன். எங்க ஊரில் கோயில் திருவிழா நடக்கும். அதில் வள்ளி கும்மியாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். நானும் தவறாமல் அந்த நிகழ்ச்சியை பார்க்கவே திருவிழாவிற்கு செல்வேன். தொடர்ந்து சென்றதால், எனக்கு கும்மிப் பாடல்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது.

சின்ன வயசில் இருந்தே எனக்கு பாட்டு பாடவும் பிடிக்கும். டி.வியில் முருகன் பாடல்கள் ஒளிபரப்பாகும் போது எல்லாம் நானும் உடன் சேர்ந்து பாடுவேன். திருவிழாவில் கும்மிப் பாடல்களை கேட்ட பிறகு எனக்கு அந்த பாடல்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. வள்ளி கும்மிப் பாடல்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். கற்றது மட்டுமில்லாமல் பாடல்களை பாடவும் தொடங்கினேன். இதற்காக தனிப்பட்ட பயிற்சி எல்லாம் நான் எடுக்கல.

அவர்கள் பாடுவதைப் பார்ப்பேன். அவர்கள் எப்படி பாடுகிறார்கள் என்று பார்த்துதான் ஒவ்வொரு பாடலின் ராகங்களையும் நான் கற்றுக் கொண்டேன். அந்த பாடல்கள் மேல் எனக்கு அளவுக்கு அடங்காத ஈர்ப்பு ஏற்பட சமூக வலைத்தளங்களில் அந்த பாடல்கள் குறித்து தேடி அதன் மூலமாகவும் பயிற்சி எடுத்தேன். நான் கும்மிப் பாடல்களை பாடத் தொடங்கியதும், பலர் என் குரல் வலம் நன்றாக இருப்பதாகவும், நன்றாக பாடுவதாகவும் பாராட்டினார்கள். இதனால் கோயில்களில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நானும் பாடத் தொடங்கினேன்.

இந்த சமயத்தில் எனக்குள் இருக்கும் பெண் தன்மை முழுவதுமாக வெளிப்படத் தொடங்கியது. வீட்டிலும் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தினை பார்த்து வீட்டில் என்னை ஒதுக்க தொடங்கினர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கினேன்’’ என்றவர் தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ள இந்த சமூகத்தில் பெரிய போராட்டத்தினை சந்தித்துள்ளார்.

‘‘ஒவ்வொரு திருநங்கைக்கும் மறக்க முடியாத தருணம், அவர்கள் தங்களுடைய அடையாளத்தை பொது சமூகத்திற்கு வெளிப்படுத்துவதுதான். எங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தினை நாங்க கண்டறிந்தாலும், அதை வெளிப்படுத்த முடியாமல் சிறைப்பட்டு கிடப்போம். காரணம், வீட்டின் சூழல் அதனை வெளிப்படுத்த முடியாமல் தடுக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் எங்களை மீறி பெண்மை தன்மை வெளியாகும் போது, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். அதன் பிறகுதான் நாங்க எங்களுக்கான அடையாளத்தினை துணிந்து இந்த சமூகத்திற்கு எடுத்துரைக்கும் போது நாங்க எங்களை முழுமையாக உணரத் தொடங்குவோம். நானும் அப்படித்தான் நான் ஒரு திருநங்கை என்று என்னை வெளிப்படுத்தினேன்.

பாதி படித்துக் கொண்டு இருக்கும் போது, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் படிப்பு பாதியில் தடைபடும். என்ன செய்வது என்று தெரியாது. படிப்பு இல்லாததால், எங்களுக்கு வேலையும் கிடைக்காது. கிடைக்கும் வேலையினை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஒரு சிலர் கைத்தட்டி சம்பாதிக்கிறார்கள். காரணம், இன்றும் இந்த சமூகத்தில் திருநங்கைகளை நம்பி யாரும் நிரந்தரமாக வேலைக்கு அமர்த்துவதில்லை.

எங்களுக்கும் இந்த சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் யாரும் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிரச்னைகளால்தான் நாங்க அனைவரும் கிடைத்த வேலைகளை செய்து வருகிறோம். ஆனால் ஒரு திருநங்கையான நான் இந்த பிரச்னைகளை சந்திக்கவில்லை. காரணம், நான் என்ன வேலை செய்யப் போகிறேன் என்பதை முடிவு செய்திருந்தேன். அது எனக்கு பிடித்த வேலையாகவும் இருந்தது.

அந்த வேலையில் நான் தொடர்ந்தும் வந்தேன். திருநங்கை என்றாலும், என்னுடைய பாடல் திறமைக்காகவே தொடர்ந்து பல கோயில்களிலும் பாடச் சொல்லி அழைத்தார்கள். நான் பாடும் பாடல்களை கேட்கும் அனைவரும் உங்க குரல் தெய்வீகமாக இருக்கிறது என்று சொல்லும் போது, மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஒரு சமூகம் எங்களை நிராகரித்தாலும், மறுபக்கம் எங்களுக்கான ஆதரவு உள்ளது என்று நினைக்கும் போது, இந்த சமூகத்தில் எங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது’’ என்றவர் திருநங்கைகளுக்கான கலைக்குழு அமைத்து அதன் மூலம் பல திருநங்கைகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி வருகிறார்.

‘‘நான் கலைத் தொழிலில் இருப்பதால், இதில் ஆர்வம் உள்ளவர்களை ஒன்றாக இணைத்து செயல்பட திட்டமிட்டேன். ‘சமயபுரம் மாரியம்மன் கலைக்குழு’ என்ற பெயரில் கலைக்குழு ஒன்றை தொடங்கினேன். என்னைப் போலவே கும்மிப் பாட்டில் ஆர்வம் கொண்ட திருநங்கை ஒருவருக்கு அந்த பாடல்களை சொல்லிக் கொடுத்தேன். இப்போது அவரும் என்னுடன் இணைந்து குழுவில் சேர்ந்து பாடுகிறார். சிலருக்கு நடனத்தில் ஆர்வம் இருக்கும். அவர்களையும் குழுவில் இணைத்திருக்கேன்.

எங்களுக்கு என தனிப்பட்ட குழு உருவானது. எங்களுடைய கச்சேரிகளை மக்களும் ஆர்வமுடன் பார்க்க தொடங்கினார்கள். அந்த சமயத்தில்தான் எனக்கு மதுரையில் உள்ள திருநங்கை வள மையத்தின் பிரியா பாபு அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் பல திருநங்கைகளுக்கு தொழில் வாய்ப்புகள் மட்டுமில்லாமல் அவர்களுக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தருகிறார். அவருடன் நானும் இணைந்து செயல்பட துவங்கினேன்.

திருநங்கைகளுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை பெற அடையாள அட்டை வேண்டும். அது இருந்தால்தான் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு எல்லாம் பெற முடியும். காரணம், திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்றால், அவர்களுடைய முகவரி, பெற்றோரின் முகவரி அவசியம். பெற்றோர்களோ இவர்களை நிராகரித்து விடுவார்கள்.

அதனால் இவர்களுக்கென்று தனி அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் தமிழ்நாடு திருநங்கைகள் நலத்துறை கொடுக்கும் அடையாள அட்டை பெற வேண்டும். அந்த அட்டையை இவர்களுக்கு பெற்றுத் தரும் வேலையைதான் தற்போது செய்து வருகிறேன். இதன் மூலம் அரசு தரும் சிறப்பு சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும். மேலும் அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித்தர சுய தொழில் வேலைவாய்ப்பு பயிற்சிகளையும் அமைத்து தருகிறேன். இந்த சமூகத்தில் ஒரு திருநங்கை முன்னேற அவர்களுக்கு அடிப்படை ஆதரவு அளித்தாலே போதும். அவர்களும் இந்த சமூகத்தில் தலைநிமிர்ந்து செயல்பட முடியும்’’ என்கிறார் மேகி..

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post எங்களுக்கு அடிப்படை ஆதரவு கொடுங்கள் ! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dothi Kummip ,Maggie ,Megi ,Madurai ,Kummi Patu ,
× RELATED தேர்தல் விதிமுறைகள் மீறி விழா: அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்கு