×

காலம் கடந்த கதை!

நன்றி குங்குமம் தோழி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் நேருவின் பழங்குடியின மனைவி எனச் சொல்லப்பட்ட ஒருவர் அவரின் வாழ்நாள் முழுவதும் அந்தப் பட்டத்தை சுமந்து வாழ்ந்து மடிந்தார் என்பது காலம் கடத்திய கதை.

`நேருவின் பழங்குடியின மனைவி’ என ஒதுக்கிவைக்கப்பட்ட 80 வயது நிறைந்த, புத்னி மஞ்சியாயின் (Budhni Manjhiyain) என்ற சந்தால் பழங்குடியினப் பெண் கடந்த நவம்பர் 17ல் காலமானார். இவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் பேசுகையில்…

“அன்று நேரு வந்தார், மாலை அணிவித்து வரவேற்றேன். நேரு சென்றுவிட்டார். பின்னர், `நேருவின் பழங்குடியின மனைவி’ என அழைக்கப்பட்டேன்.பிறகு, என் சொந்த வாழ்க்கைக்காக நான் ஓடவேண்டியிருந்தது” என்று கூறியிருந்தார்.

நேருவோ இந்தியாவின் பிரதமர். புத்னியோ பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஏன் நேருவின் மனைவி என்று அழைக்கப்பட வேண்டும்? இதன் பின்னணியில் உள்ள அந்த விசித்திரக் கதையை அறிய பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

இது நிகழ்ந்தது 1959-ல்.அதாவது, அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில், தாமோதர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பஞ்செட் அணையின் திறப்பு விழாவுக்காக வருகை புரிந்தார். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் (DVC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பிரதமர் நேருவை வரவேற்க, அதில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி புத்னி மஞ்சியாயின் என அழைக்கப்பட்ட சந்தால் பழங்குடியினப் பெண் தேர்வுசெய்யப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சி நிரல்படி, புத்னி பிரதமர் நேருவுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் நேருவின் வேண்டுகோள்படி அந்த சிறுமியே அணையை திறந்தும் வைத்தார். அதன் பிறகு நடந்தவைதான் புத்னி மஞ்சியாயின் வாழ்வை முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது.வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் அணை திறப்பு விழாவில், அணையை திறக்கும் வாய்ப்பு கிடைத்தும், புத்னியின் வாழ்வில் அது பாக்கியமான நிகழ்வாக அமையவில்லை.

காரணம், இவர் சார்ந்த சந்தால் பழங்குடி சமூகத்தில், பெண் ஒருவருக்கு மாலையிட்டாலே அந்த நபருடன் திருமணம் ஆகிவிட்டதாகக் கருதப்படுமாம். நேருவுக்கு புத்னி மஞ்சியாயின் தனது கரங்களால் மாலையிட்டதால், நேருவுடன் அவருக்குத் திருமணமாகிவிட்டதாகக் கருதி, பழங்குடியினர் அல்லாதவரை புத்னி மஞ்சியாயின் திருமணம் செய்ததாகவும் சொல்லப்பட்டு, அவர் சார்ந்த சந்தால் சமூகத்தில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். அத்துடன் புத்னி தான் பணிபுரிந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக மேற்குவங்கத்துக்கு இடம்பெயர்ந்த புத்னி மஞ்சியாயின், அங்கு புருலியா பகுதியில் நிலக்கரிச் சுரங்கத்தில் தினக்கூலியாய் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனக்கு அடைக்கலம் கொடுத்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளரான சுதிர் தத்தா என்பவரையே திருமணமும் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன.பல வருடங்களுக்குப் பிறகு1985-ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் புத்னி மஞ்சியாயின் குறித்து அறிந்த ராஜீவ்காந்தி அவரை நேரில் சந்தித்தார். அப்போது புத்னி தனக்கு நேர்ந்த துயரத்தை ராஜீவ் காந்தியிடம் முழுமையாக கண்ணீருடன் விவரித்திருக்கிறார். ராஜீவ் காந்தியின் அறிவுறுத்தலில் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் மீண்டும் புத்னிக்கு வேலை வழங்கப்பட்டது. சுமார் 20 வருடங்கள் அதில் வேலை பார்த்த புத்னி மஞ்சியாயின் 2005-ல் பணி ஓய்வுபெற்றார்.

பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள் விசித்திரமான சம்பிரதாயங்களை கடைபிடிப்பதுண்டு. மாலை அணிவித்ததால் மனைவி ஆகிவிட்டார் என அவர் சார்ந்த சமூகம் சொன்னதால், செய்யாத தவறுக்காக தன் வாழ்வையும் வாழ்விடத்தையும் இழந்து, தனது குடும்பத்தை பிரிந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் புத்னி.நேருவின் பழங்குடியின மனைவி எனும் பட்டத்தை வாழ்நாள் முழுதும் சுமந்து வாழ்ந்தார் என்பது காலத்தால் கடத்தப்பட்ட கதையாகவே இருந்தாலும், ஒரு பெண்ணிடம் இருந்து அவரின் வாழ்வுரிமையை பறித்தது ஏற்க முடியாத ஒன்றாகவே இதில் பார்க்கப்படுகிறது.

தொகுப்பு: மணிமகள்

The post காலம் கடந்த கதை! appeared first on Dinakaran.

Tags : Kamala Nehru ,India ,Jawaharlal Nehru ,Nehru ,
× RELATED மாணவர் நலனில் அக்கறை கொண்டு சீரிய...