×

முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார்… தமிழ்நாட்டை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பாய்கிறது!!

ராய்ப்பூர் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் இருந்து வருகின்றார். இவர் மீது நில மோசடி தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் 7 முறை சம்மன் அனுப்பியும் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள சோரன் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி சாந்தி நிகேதனில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்.

இந்த சோதனையில் ரூ.36லட்சம் ரொக்கம், பினாமி பெயரில் இருந்த பிஎம்டபிள்யூ கார் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஹேமந்த் சோரன் தரப்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமலாக்கத்துறையினர் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவது பற்றி போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பாய்கிறது. இதனிடையே ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார்… தமிழ்நாட்டை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பாய்கிறது!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Hemant Soran ,Tamil Nadu ,Jharkhand ,Raipur ,Mukti Morcha ,Congress ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...