×

சிஎம்டிஏ எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் சென்னை ஆட்டோக்களின் பர்மிட்டுகள் நீட்டிப்பு: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு வரை செல்லலாம்

சென்னை: சி.எம்.டி.ஏ எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோக்களின் பர்மிட்டுகள் நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இனி ஆட்டோக்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் வரை பயணிகளை சவாரி ஏற்றிச்செல்லலாம். சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூலம் நேரடியாக செல்லும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. மேலும், ஆட்டோக்களில் பர்மிட் பிரச்னை காரணமாக நேரடியாக கிளாம்பாக்கம் வரை பயணம் செய்ய முடியாத நிலை நீடித்து வந்தன.

இதுதொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பர்மிட்டை நீட்டித்து தர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று இனி சென்னை பர்மிட் பெற்ற ஆட்டோக்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் சிஎம்டிஏ எல்லை வரை உள்ள பகுதிகளுக்குள் சென்று வரலாம் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி, இனி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எல்லையை தாண்டியதாக அபராதங்கள் காவல்துறையாலும் ஆர்டிஓ அதிகாரிகளாலும் விதிக்கப்படாது. இதுவரை எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோக்களுக்கு பர்மிட் எடுக்கப்படுகிறதோ அதனை சுற்றியுள்ள 30 கி.மீ வரை மட்டுமே இயக்க முடியும் என நடைமுறை இருந்தது. இதனால் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை ஆட்டோக்கள் செல்வதில் பிரச்னை நீடித்து வந்தது. தற்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் (நிலை – 3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையில் 705 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் (நிலை -4) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 61 பேருக்கு முதல்வர் விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்குவார்.

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறைக்கு ரூ.20 கோடி அளித்திருக்கிறோம். ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைத்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்குவதற்கு தயாராக உள்ளது. கழிவறைகள் கூடுதலாகவே அமைக்கப்பட்டு, அவற்றை பராமரிக்கவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் உணவகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கட்டணமில்லாமல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்து, மாத்திரைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகளின் அனைத்து பிரச்னைகளையும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், போக்குவரத்துத் துறையும் இணைந்து முழுமையாக தீர்த்து வைப்போம்.

கோயம்பேடு பேருந்து நிலையம் 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் மக்களுக்கு பயன்படும் கட்டமைப்புகளோ, திட்டமோ செயல்படுத்தும்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் நீரூற்று பூங்காவும், 11 ஏக்கரில் காலநிலை பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது போல் கோயம்பேட்டிலும் பசுமை பூங்கா ஏற்படுத்தப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்தளவில் தற்போது தனியார் ஆலோசனை நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளோம். அதன் இறுதி அறிக்கை வந்தவுடன் முழுமையாக கூர்ந்து ஆய்வு செய்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவு பெற்று மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகுதான் எவ்வித முடிவும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post சிஎம்டிஏ எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் சென்னை ஆட்டோக்களின் பர்மிட்டுகள் நீட்டிப்பு: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு வரை செல்லலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanchipuram ,Thiruvallur ,Chengalpattu ,Chennai Coimbatore ,South… ,CMDA ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...