×

குறைந்த விலையில் சேலை என கூறி 3 பெண்கள் உட்பட 7 பேரிடம் ஆன்லைனில் ரூ.4.65 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, ஜன. 31: புதுச்சேரியை சேர்ந்த சவுந்தரி, மூலக்குளத்தை சேர்ந்த திருபுரசுந்தரி ஆகியோருக்கு வாட்ஸ்அப்பில் குறைந்த விலையில் சேலை விற்பனை செய்வதாக மெசேஜ் வந்துள்ளது. இதனை நம்பி சவுந்தரி ரூ.3.85 லட்சமும், திருபுரசுந்தரி ரூ.3,500ம் செலுத்தி சேலை வாங்க ஆர்டர் செய்துள்ளார். பல நாட்கள் கடந்த பிறகும் சேலை வரவில்லை. அதன் பிறகு, மோசடி நபருக்கு பணம் அனுப்பி ஏமாந்தது தெரியவந்தது. புதுச்சேரியை சேர்ந்த நவீன்ராஜ் என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து, அவருக்கே தெரியாமல் மோசடியாக ரூ.21,520 எடுக்கப்பட்டுள்ளது.

வாணரப்பேட்டையை சேர்ந்த ரங்கன் என்பவரின் வாட்ஸ் அப்பில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பனை செய்வதாக மெசேஜ் வந்துள்ளது. அதன்பேரில் அவர் ரூ.4 ஆயிரம் செலுத்தி பட்டாசு ஆர்டர் செய்து ஏமாற்றப்பட்டுள்ளார். திருபுவனையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத நபர் கூறியதை நம்பி ரூ.20,000 முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.ஆதார் எனேபிள் பேமென்ட் சிஸ்டம் (ஏஇபிஎஸ்) என்கிற முறையை பயன்படுத்தி காரைக்கால் தர்மாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் (43) என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் தர்மாபுரம் புதுத்துறையை சேர்ந்த முத்துசெல்வன் (50). இவரது வங்கி கணக்கில் வெகுமதி புள்ளிகளை பெறுவது தொடர்பாக ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதிலிருந்து லிங்க் வழியாக சென்று பயனாளர் பெயர், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்தார். தொடர்ந்து, அவரது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, அவரது வங்கி கணக்கில் இருந்து 29,500 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவையில் 3 பெண்கள் உட்பட 7 பேரிடம் 4 லட்சத்து 65 ஆயிரத்து 520 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குறைந்த விலையில் சேலை என கூறி 3 பெண்கள் உட்பட 7 பேரிடம் ஆன்லைனில் ரூ.4.65 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Soundary ,Tirupurasundari ,Moolakulam ,WhatsApp ,Soundari ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு