×

சொத்து நிர்ணயம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.கே.பேட்டை சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

 

திருவள்ளூர், ஜன.31: சொத்து நிர்ணயம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.கே.பேட்டை சார்பதிவாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த செல்வ ராமச்சந்திரன் (39) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆர்.கே.பேட்டை விளக்கனாம்பூடி புதூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேருக்குச் சொந்தமான 70 சென்ட் விவசாய நிலத்தை ராணிப்பேட்டை மாவட்டம், மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

திருத்தணி அடுத்த மத்தூரைச் சேர்ந்த ஜெய்சங்கர் (54) என்பவர் இந்த நிலம் விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். கடந்த 22ம் தேதி ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சொத்து மதிப்பீடு அதிகமாக இருந்ததால், வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயம் செய்வதற்கான அறிக்கையை மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்க சார்பதிவாளர் செல்வ ராமச்சந்திரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்காக பேரம் பேசப்பட்டதையடுத்து இறுதியில் ரூ.35 ஆயிரம் பெற்றுக் கொள்ள அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை விரும்பாத இடைத்தரகர் ஜெய்சங்கர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை முகாமிட்டனர். அப்போது சார்பதிவாளர் செல்வ ராமச்சந்திரனிடம் ஜெய்சங்கர் ரசாயனம் தடவிய ரூ.35 ஆயிரம் பணத்தை வழங்கினார்.

அப்போது அருகில் இருந்த தற்காலிக கணினி இயக்குபவர் சிவலிங்கத்திடம் அந்த பணத்தை வழங்குமாறு அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த லஞ்சப் பணத்தை அவர் கையில் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக இருவரையும் பிடித்து கைது செய்தனர். சொத்து மதிப்பீடு நிர்ணயம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர், அலுவலக கணினி இயக்குபவர் என 2 பேர் கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் ஆர்.கே.பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சொத்து நிர்ணயம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.கே.பேட்டை சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : RK Petty ,Tiruvallur ,Tiruvallur District RK Pett Sub-Registrar Office ,Cuddalore ,RK Pett Sub-Registrar ,Anti-Bribery Department ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...