×

1974ல் படித்த முன்னாள் மாணவர் வழங்கினார் சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை: ஏஐ படிப்புக்கு பயன்படுத்தப்படும் இயக்குநர் காமகோடி தகவல்

சென்னை: கல்லூரி, பள்ளி படிப்பை மாணவர்கள் முடித்தாலும், அந்த பள்ளி, கல்லூரிகளுடன் தொடர்பில் இருக்கும் வகையில் முன்னாள் மாணவர் சங்கம் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படும் முன்னாள் மாணவர் சங்கம் தாங்கள் படித்த கல்லூரி, பள்ளிகளுக்கு தேவையானவற்றை அவ்வப்போது செய்து கொடுக்கின்றன. இதில் ஒரு படி மேலாக, முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்த சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இவர் 1974ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தவர் ஆவார்.

இந்த அளவுக்கு நன்கொடை சென்னை ஐ.ஐ.டி.க்கு இதுவரை யாரும் வழங்கியது இல்லை. அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் இதனை பெரிய பரிசாக கருதுகிறது. அதன்படி, ரூ.110 கோடியை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியிடம், முன்னாள் மாணவரும், வத்வானி தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளி தலைவரும், அமெரிக்காவின் “ஐகேட்’’ கேபிடல் கார்ப்பரேசன் நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான சுனில் வத்வானி ரூ.110 கோடி நன்கொடைக்கான ஒப்பந்தத்தை கொடுத்தார்.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கூறுகையில், நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.110 கோடி, சென்னை ஐ.ஐ.டி.யின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) சார்ந்த படிப்புக்காக மட்டும் செலவிடப்படும். அதன்படி, “பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு”என்ற படிப்பு வரும் கல்வியாண்டில் இருந்து சென்னை ஐ.ஐ.டி. அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதற்காக பிரத்யேக துறை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாடம் சார்ந்த வகுப்புகள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு மேலாண்மை படிப்புகளும் வர இருக்கிறது’’ என்றார்.

சுனில் வத்வானி கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக உருவெடுத்து வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் கல்வி, வாழ்க்கை, உற்பத்தி என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் இருக்கும். அந்த வகையில் மாணவ-மாணவிகள் அந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான், இந்த நன்கொடையை வழங்கி இருக்கிறேன்’’ என்றார்.

* விளையாட்டில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு பின் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விளையாட்டில் சாதனை படைப்பது என்பது மிகவும் கடினம். வெற்றி, தோல்விகளை சகித்துக் கொள்ளும் தன்மையை குழந்தைக்கு விளையாட்டு வழங்குகிறது. எனவே, விளையாட்டில் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2வில் தேசிய அளவில் ஒரு பதக்கம் மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு இருந்தால், சென்னை ஐஐடியில் அவர்களுக்கு பி.டெக் படிப்பில் சீட் தரலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஜேஇஇ ரேங்க் லிஸ்ட்டில் இருக்க வேண்டும். அவர்களுக்கு சிறப்பு விளையாட்டு ஒதுக்கீடு தரலாம் என திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களில் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 1974ல் படித்த முன்னாள் மாணவர் வழங்கினார் சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை: ஏஐ படிப்புக்கு பயன்படுத்தப்படும் இயக்குநர் காமகோடி தகவல் appeared first on Dinakaran.

Tags : 1974 ,Alumnus ,IIT ,Chennai ,Kamakody ,Alumni Association ,1974 Alumni ,Kamakodi ,Dinakaran ,
× RELATED வங்காள விரிகுடா, பெருங்கடல்கள்...