×

வேலை வாங்கி தருவதாக மோசடி அரசு எம்பளத்துடன் காரில் உலா வந்த 2 போலி அதிகாரிகள் கைது

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி ரோந்து போலீசார் அரியானூர், மகுடஞ்சாவடி ஆகிய பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அந்த காரில் தலைமை செயலகம் என்று குறிப்பிடப்பட்டு அரசு எம்பளமும் இருந்தது. இதனால் காரில் இருந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் சென்னை திருவான்மியூரை சேர்ந்த திருமால் (52), பெருங்களத்தூரை சேர்ந்த கருப்பையா (60) என்பதும், இவர்கள் தலைமை செயலக நிதித்துறையில் நிர்வாக அலுவலர்கள் என போலியான அடையாள அட்டையை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இவர்கள் வைகுந்தம் சுங்கசாவடியில் அரசு அதிகாரி என கூறி காரை வேகமாக ஓட்டி வந்துள்ளனர்.

மேலும், இவர்கள் தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் என்றும், தங்களுக்கு எல்லா அதிகாரிகளையும் தெரியும் என்றும் கூறியுள்ளனர். பணியாளர்களுக்கு டிரான்ஸ்பர், வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அரசு எம்பளத்துடன் கூடிய காரை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் யார், யாரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post வேலை வாங்கி தருவதாக மோசடி அரசு எம்பளத்துடன் காரில் உலா வந்த 2 போலி அதிகாரிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Kondalampatti ,Aryanur ,Makudanchavadi ,Chief Secretariat ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!