×

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைக்காக ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது

சென்னை: பழைய ஓய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் இதர துறைகளில் பணியாற்றுவோரின் சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பழைய ஓய்வு ஊதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கிவைத்த சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைவது, பதவி உயர்வு, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், அரசில் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுதல், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல், தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் இரா.தாஸ் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ைகது செய்யப்பட்டனர். இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டு கைதாயினர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைக்காக ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Jacto- ,CHENNAI ,Jacto-Jio ,Dinakaran ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...