×

மார்த்தாண்டத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சென்றபோது ஓடும் ஆம்புலன்ஸில் செவிலியரை சரமாரி தாக்கிய போதை ஆசாமி


மார்த்தாண்டம்: தமிழ்நாட்டில் 108 என்ற அவசர உதவி எண் என்றாலே ஆம்புலன்ஸ் சேவைதான் நியாபகத்துக்கு வரும். விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, பிரசவம், நோய் பாதிப்பு, மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்வது, தானமாக பெறப்பட்ட உடலுறுப்புகளை பிற மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வது என எண்ணற்ற சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. எந்த இடத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் அங்கு இந்த ஆம்புலன்ஸ் விரைந்து சென்றுவிடும். ஆனால் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நோயாளிகளால் பிரச்னை வந்துவிடுகிறது. அப்படித்தான் மார்த்தாண்டத்தில் நடந்துள்ளது.

அதாவது நேற்று காலை 10 மணியளவில் குளக்கச்சி பகுதியில் இருந்து மருத்துவ தேவைக்காக 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் குமாரபுரம் முட்டைக்காடு பகுதியை சேர்ந்த சாலிமோள் (29) என்பவர் செவிலியராக இருந்தார். குளக்கச்சி தனியார் மதுபானக்கூடம் அருகே விபத்தில் சிக்கிய 2 பேர் காயத்துடன் இருந்ததை கண்டு அவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். விசாரிக்கையில் அவர்கள் கருங்கல் எட்டணி பகுதியை சேர்ந்த ஜார்ஜ் ஜெபஸ்டின் மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டது. காயம்பட்டவர்களில் ஜார்ஜ் ஜெபஸ்டின் நன்றாக குடிபோதையில் இருந்துள்ளார். அவர் எங்களை எங்கே அழைத்து செல்கிறீர்கள்? விரைவில் சென்றுவிடுவீர்களா? அது என்ன? இது என்ன? என்று செவிலியர் சாலிமோளிடம் வாய்சவடால் விடுத்துக்கொண்டே இருந்தார்.

சில கேள்விகளுக்கு பதிலளித்த சாலிமோள், யப்பா முடியலையா சாமி… என பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் ஜெபஸ்டின் வாய்க்கு வந்தபடி சாலிமோளை வசைபாடினார். ஆனாலும் குடிகாரன் பேச்சு… விடிந்தால் போச்சு என்கிற மாதிரி ஜார்ஜ் ஜெபஸ்டின் சுயநினைவில் இல்லாததால் சாலிமோள் கணிவோடு நடந்துகொண்டார்.இதையடுத்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஜார்ஜ் ஜெபஸ்டின் திடீரென ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்தே சாலிமோளின் கழுத்தை பிடித்து நெரித்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத அவர் போராடி தன்னை விடுவித்துக்கொண்டார். ஆனால் ஜார்ஜ் ஜெபஸ்டின் விடாமல் சாலிமோள் அணிந்திருந்த வெள்ளைநிற கோட் உடையை பிடித்து இழுத்து கிழித்ததோடு, ஆம்புலன்ஸ் வாகன கதவில் ஓங்கி தள்ளிவிட்டாராம்.

இதில் சாலிமோளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸுக்குள் நடந்த இந்த போராட்டத்திற்கு மத்தியில் குழித்துறை அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் வந்துவிட்டதால் நிம்மதியடைந்த சாலிமோள் விறுவிறுவென ஆம்புலன்சில் இருந்து இறங்கி தப்பினார். பின்னர் மருத்துவ ஊழியர்கள் உதவியுடன் 2 ஆசாமிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் தன்னை அடித்து காயப்படுத்திய ஜார்ஜ் ஜெபஸ்டின் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் செவிலியர் சாலிமோள் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ஜார்ஜ் ஜெபஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

The post மார்த்தாண்டத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சென்றபோது ஓடும் ஆம்புலன்ஸில் செவிலியரை சரமாரி தாக்கிய போதை ஆசாமி appeared first on Dinakaran.

Tags : Addicted ,Assami ,MARTHANDAM ,NIAPAGAT ,TAMIL NADU ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...