×

புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க கோரி பிஏபி விவசாயிகள் நள்ளிரவு வரை தர்ணா

பொள்ளாச்சி: புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க கோரி பிஏபி விவசாயிகள் நள்ளிரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2வது சுற்று தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் 28ம் தேதி பிஏபி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்குள் 2 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதி விவசாயிகள் நேற்று மாலை பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பிஏபி தலைமை அலுவலகத்தை, ஆழியார் நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் தலைமையில் விவசாயிகள் திடீர் முற்றுகையிட்டனர். அப்போது புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு 21 நாட்களாவது தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரியிடம் விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஆனால் விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பிஏபி வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஆயகட்டு பாசனப்பகுதிக்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டும்மே போராட்டத்தை கைவிடுவோம் என தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த டிஎஸ்பி தங்கராஜ், தாசில்தார் ஜெயசித்ரா லிட்டர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத விவசாயிகள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என கூறியதுடன் நள்ளிரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து, பின் அதிகாரிகள், புதிய அயகட்டுப் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து, உதவி கலெக்டர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை விரைவில் நடத்த முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர். இதை அடுத்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க கோரி பிஏபி விவசாயிகள் நள்ளிரவு வரை தர்ணா appeared first on Dinakaran.

Tags : PAP ,Tarna ,Pollachi ,Aaliyar Dam ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...