×

சிறுவாபுரி முருகன் கோவிலில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு: பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருப்பு மண்டபத்தில் திடீரென புகுந்த கட்டுவிரியன் பாம்பினால் பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். நேற்று தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம்,50 ரூபாய்,100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோவிலுக்கு வெளியே கடும் வெயிலில் நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும்,திருமண தடை நீங்க வேண்டும், அரசியல்,ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். உற்சவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனிடையே காத்திருப்பு மண்டபத்தில் திடீரென புகுந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பினால் பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கட்டுவிரியன் பாம்பினை உயிருடன் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சிறுவாபுரி முருகன் கோவிலில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு: பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Siruvapuri Murugan temple ,Tiruvallur ,Balasubramanya Swamy ,Siruvapuri ,Periyapalayam ,
× RELATED குத்தாலம் காந்திநகர் பாலசுப்பிரமணிய...