×

பொதுமக்களிடம் மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம் திரைத்துறையில் முதலீடு செய்தது கண்டுபிடிப்பு

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி பதிவு செய்து பணத்தை முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்து உள்ளனர் என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பட தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மூலமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் முதலீடுகளை ஈற்று ரூ.2,438 கோடி மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாயில் கைது செய்யப்பட்டிருந்தும் அவரை இந்திய அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மோசடி செய்யப்பட்ட பணம் எந்தெந்த நிலையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி அவற்றை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நிர்வாக இயக்குனர்கள், நிர்வாகிகள் இவர்களிடமிருக்கும் நேரடியான சொத்துக்களையும் பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ஏஜெண்டுகள் யாரெல்லாம் இருக்கின்றாரோ அவர்களிடமும் மோசடி செய்யப்பட்ட பணம் எவ்வாறு பதுங்கியுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மோசடி செய்யப்பட்ட பணம் சினிமா எடுப்பதற்காக ராஜசேகர் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தானே திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செய்து அதன் மூலமாக படத்தயாரிப்பில் ஈடுபட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பில் ஈடுப்பட்டபோதுதான் மோசடி தொடர்பான பிரச்சனை எழுந்ததால் ராஜசேகர் தலைமறைவானது தெரியவந்துள்ளது.

இதனால் சினிமாவில் எந்தெந்த படங்களுக்கெல்லாம் மோசடி செய்யப்பட்ட பணத்தில் ஃபைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது, ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான பணபரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதா உள்ளிட்ட விவகாரங்களை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

The post பொதுமக்களிடம் மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம் திரைத்துறையில் முதலீடு செய்தது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Aruthra ,Chennai ,Arutra Gold ,Arutra Pictures ,Aruthra Company ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...