×
Saravana Stores

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

ஒடுங்க வைக்கும் ஒற்றைத் தலைவலி

அனேகமாக ஒரு நாளில் ஒரு தடவையாவது கீழ்க்கண்ட வாசகத்தைக் கேட்கிறேன். பல நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் கேட்க நேர்வதுண்டு.. ”மேடம்! எனக்கு ரொம்ப நாளா ஒரு பக்கத் தலைவலி ரொம்ப இருக்கு.. கண்ணோடு சேர்த்து ஒரு பக்கம் பயங்கரமா வலிக்கும்.. சில சமயம் வாந்தி வர்ற மாதிரி இருக்கும். வாந்தி வந்தால்தான் சரியாகும். நிறைய சத்தம் கேட்டா வந்துடும். பளிச்சுன்னு லைட் பார்த்தால்கூட தலைவலி வந்துரும்.

பஸ்ல போனாலும், கூட்டத்துல நின்னாலும் சொல்லவே வேண்டாம்.. எவ்வளவோ ட்ரீட்மெண்ட் பார்த்துட்டேன். இன்னும் கேட்கல” என்று ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தன் தொந்தரவைக் கூறுவதும், உடன் வந்திருக்கும் அவரது‌ உறவினர், ‘‘தினசரி மாத்திரை போடுறா.. அது வேற உடம்பு பாதிக்கும் இல்ல.. அப்புறம் எப்பவும் டென்ஷனா இருக்கா. டென்ஷன் ஆனாலே தலைவலி வரத்தானே செய்யும்?” என்று கேட்பதும் அன்றாடக் காட்சிகள்.

இது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய பொதுவான ஒரு விவரிப்பு. பெரும்பாலும் மைக்ரேன் என்றாலே ஒற்றைத் தலைவலிவரும் என்று சொல்கிறோம். சில சமயங்களில் இரண்டு புறங்களிலும் தலை வலி ஏற்படலாம். வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். அனேகமானவர்களுக்கு மைக்ரேன் பிரச்சனை ஏற்படும் பொழுது தாங்க முடியாத தலைவலி ஏற்படும். ‘மண்டையை பிளக்குது’ என்றோ ‘பளிச் பளிச்சுன்னு மூளைக்குள்ள மின்னல் மாதிரி வெட்டுது’ என்றோ நோயாளி தன் அறிகுறியை விவரிப்பார். சில மணி நேரம் முதல் சில நாட்கள் வரை கூட இந்தத் தலைவலி நீடிக்கக்கூடும். அன்றாட வேலைகளைப் பெருமளவில் பாதிக்கக் கூடியதாக இந்தத் தலைவலி அமையும்.

சிலருக்கு தலைவலி துவங்குவதற்கு முன்பாகவே சில அறிகுறிகள் தோன்றும். அதீத தலைவலி என்ற அறிகுறி வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பான பருவத்தை Prodrome என்கிறோம். இதில் மலச்சிக்கல், சில மனவியல் பாதிப்புகள் (mood swings), அதிகம் சாப்பிடுவது, கழுத்துப் பிடிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கொட்டாவி விடுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.அடுத்து Aura என்று ஒரு நிலை இருக்கிறது.

திடீர் தலைவலிக்கு (migrainous attack) சற்று முன்னால் கண்ணின் முன்னால் கறுப்பு நிறப்புள்ளிகள் தோன்றுவது, பார்வை மங்கலாகத் தெரிவது, வாய் கசப்பு, கைகால்கள் மரத்துப்போவது, ஒரு பக்க கால் அல்லது கைகளில் யாரோ ஊசியால் குத்துவது (pins and needles sensation) போன்ற உணர்வு இவை ஏற்படலாம். சிலருக்குப் பேசுவதே சிரமமாக இருக்கும்.இரண்டு மூன்று முறை இப்படியான அறிகுறிகளை அனுபவித்த பின் இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு தலைவலி ஏற்பட போகிறது என்பதை அந்த நோயாளி உணர்ந்து கொள்வார்.

*தலையில் வலி தோன்றிய காலகட்டத்தை Migraine attack என்கிறோம். இந்த அட்டாக்கின் தன்மை நபருக்கு நபர் மாறுபடக்கூடிய ஒன்று. சராசரியாக 4 முதல் 72 மணி நேரங்களுக்குள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கக் கூடும். சிலருக்கு வாரத்திற்கு ஒருமுறை இப்படியான தீவிர வலி வரும். ஒரு சிலருக்கு எப்போதாவது ஒரு முறை வரும். அனிதா, வனிதா இருவரும் சகோதரிகள். அனிதாவுக்கு வாரா வாரம் சுமார் ஐந்து மணி நேரம் மைக்ரேன் தலைவலி வருகிறது. ‘‘எனக்கும் மைக்ரேன் தலைவலி தான்னு சொன்னாங்க.. ஆனா எனக்கு கடந்த பத்து வருஷத்துல இதுவரைக்கும் மூணு தடவையோ, நாலு தடவையோ தான் வந்திருக்கு.. ஆனா வந்தா மூணு நாள் தொடர்ந்து இருக்கும் எந்த வேலையும் செய்ய முடியாது” என்றார் வனிதா.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கை கால்களை வெட்டி இழுப்பதைத் தான் வலிப்பு என்கிறோம். அவர்களுக்கு அந்தக் காலம் முடிந்தவுடன் சிறிது நேரத்திற்கு குழப்பம் மயக்கமும் இருக்கும் (post ictal confusion). அந்த நேரத்தில் யாராவது பேசினாலும் சரியாக பதில் சொல்லமாட்டார்கள். அதைப் போன்ற ஒரு பருவம் மைக்ரனுக்குப் பின்னாலும் உண்டு. மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர தலைவலி வந்து சென்ற அடுத்த நாள் முழுவதும் ஒருவித குழப்பத்தில் இருந்தேன் என்று சொல்வார்கள். என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும் சொல்வார்கள். வெகு சிலருக்கு தலைவலிக்கு பின்னான நாள் மிகவும் சுறுசுறுப்பானதாகவும் அமைவதுண்டு.

மைக்ரேன் தலைவலியும் அதற்கு முன்னும் பின்னுமான காலம் கடுமையானதாக இருக்கும் என்பதால் இந்த வகை தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலைவலிக்கு என்ன காரணம்? கண்ணாடி போட்டா போதுமா? ஸ்கேன் எடுத்தேன் ஒன்னும் இல்லன்னு சொன்னாங்களே? என்று பல சந்தேகங்களைக் கேட்பார்கள். மைக்ரேன் தலைவலியுடன் பார்வை குறைபாடும் சேர்ந்து இருந்திருந்தால் கண்ணாடி போட்டால் தலைவலி ஓரளவு குறையக்கூடும். ஆனால் ஏற்கனவே கூறியது படி இந்த வகை தலைவலி ஏற்படும் இடமும், நேரமும் அது கண் தொடர்பானது இல்லை என்பதை நமக்குக் கூறிவிடும்.

கலைவாணிக்கு மைக்ரேன் தலைவலியும் வரும், பார்வைக் குறைபாட்டிற்கு கண்ணாடியும் அணிந்திருப்பார். கண்ணாடி உடைந்த பின் புதிய கண்ணாடி மாற்றிக்கொள்வதற்காக வந்தார். புது கண்ணாடி போட்ட பிறகும் தலைவலி போகலையே என்றார். ‘‘உங்க தலைவலிக்கு இரண்டு காரணங்கள். நீங்க படிக்கும்போதும், எழுதும்போதும் கஷ்டமா இருக்குன்னு சொன்னீங்கல்ல, அதுக்குக் காரணம் கண்ணுடைய அளவில் இருக்கும் சின்ன மாறுபாடு.

அதனால் வரக்கூடிய தலைவலி நெற்றிப் பகுதியில் இருக்கும், படிக்கும் போது அதிகமாகும். மைக்ரேனுக்கு பல காரணங்கள். குறிப்பா டென்ஷன், கவலை, பரபரப்பாக வேலை செய்வது இதெல்லாம் மைக்ரேனை அதிகமாக்கக் கூடிய காரணிகள். சில ஹார்மோன் வேறுபாடுகள், மருந்து மாத்திரைகள், வேறு சில நோய்கள் காரணமாகவும் மைக்ரேன் ஏற்படலாம் என்று கலைவாணியிடம் விளக்கினேன்.

‘‘எப்பதான் இந்த பிரச்சனை சரியாகும்? நிரந்தரமாக கடைசி வரைக்கும் இருக்குமா?” என்றார் கலைவாணி. ‘‘பெரும்பாலும் இது இளம் மற்றும் நடுத்தர வயதினரை பாதிக்கக் கூடியது. பரம்பரை, சூழல் முதலான காரணங்களால் இது ஏற்படலாம். சிலருக்கு அடிக்கடி காஃபி, டீ, மது அருந்துவது காரணமா இருக்கும், பெயிண்ட் உள்ளிட்ட சில வாசனைகள், தூக்கமின்மை, சிலருக்கு அதிக தூக்கம் கூட தலைவலியை உருவாக்கும்.

வயது ஏற ஏற அடிக்கடி தலைவலி வருவது நிச்சயம் குறையும். இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நிரந்தரத் தீர்வு என்று எதுவும் இல்லை. ஆனால் வாராவாரம் வருவதை, மாதம் ஒரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ வருவது போல் தள்ளிப் போடுவது சாத்தியம். நடைப்பயிற்சி செய்வது, யோகாசனம் செய்வது, நல்ல இசையைக் கேட்பது போன்ற மனதை இலகுவாக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமாவது தனக்கென ஒதுக்க வேண்டும்.

உறக்கம், விழிப்பு, வெளிவேலை, வீட்டு வேலை குழந்தைகளுக்கான கவனிப்பு என்று அடுத்தடுத்து இயங்காமல் நிச்சயமாக ஓய்வுக்கு நேரம் கொடுக்க வேண்டும். தூக்கம் மட்டுமே ஓய்வாகி விடாது. நமக்குப் பிடித்த பொழுதுபோக்கு எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, தையல் வேலை என்றும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் புதிது புதிதாக முயற்சிகள் செய்யலாம்.

ஆனால் அதுவும் அதிக அழுத்தம் கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என்று விரிவாக விளக்கினேன். நான்‌ சொன்னவற்றை அப்படியே கடைப்பிடித்து வந்தார் கலைவாணி. அடுத்து அவரை சந்திக்கும்போது தலைவலி வருவது வெகுவாகக் குறைந்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சுயமருத்துவம் கூடவே கூடாது. தலைவலிக்கான பிற காரணங்களை மருத்துவர் ஆராய்ந்து பட்டியலில் இருந்து நீக்கம் செய்த பின் (ruling out other causes) உங்களுக்கு வந்திருப்பது மைக்ரேன் தான் என்று உறுதி செய்வார். இது அறிகுறிகளை வைத்து மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய நோய். ஸ்கேன் அறிக்கையிலோ ரத்தப் பரிசோதனை அறிக்கையிலோ மைக்ரேன் தான் என்பதற்கு எந்த சான்றும் இருக்காது.

‘இவ்வளவு தீவிரமானதா ஒற்றைத் தலைவலி?’ என்ற அச்சம் வேண்டாம். இதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஒருவருக்கு பயணம் செய்கையில் தலைவலி வரும் என்ற நிலை இருந்தால் அவர் பயணத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு மனப் பதற்றம், சோர்வு அதிகமாக இருக்கும். அத்தகைய நோயாளிகள் அதற்கென இருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உறவினர்களில் யாருக்காவது ஒற்றைத் தலைவலி இருந்தால் எனக்கும் அது தான் காரணமாக இருக்கும் என்று சிலர் நினைத்துக் கொள்வார்கள். மைக்ரேன் என்று நினைத்துக் கொண்டு, ரத்தக் கொதிப்பு, மூளையில் ஏற்படும் கட்டிகள் போன்ற தீவிரப்‌ பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டு விடக்கூடாது.

மைக்ரேனின் தன்மைகள் பற்றிக் கூறும்பொழுது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம், முடிந்த அளவு இயற்கை உணவை உண்ணுதல், நேரத்திற்குச் சாப்பிடுதல், நேரத்திற்குத் தூங்குதல், மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருத்தல் போன்ற பழக்கங்களை சிறு வயதிலிருந்தே பழகி வந்தால் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல நோய்களைத் தவிர்க்கலாம்.‌அந்த வகையில் மைக்ரேன் வாழ்வியல் நோய்களில் ஒன்று எனலாம்!

The post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Akilanda ,Dinakaran ,
× RELATED உடல்நலம் காக்கும் உணவு விதிகள்!