×

மீஞ்சூர் அருகே பெண் தவற விட்ட 4 பவுன் செயினை போலீசில் ஒப்படைத்த தொழிலாளிக்கு இன்ஸ்பெக்டர் பாராட்டு

பொன்னேரி: மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர்- புதுப்பேட்டு செல்லும் சாலை அம்பேத்கர் சிலை வளைவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் 4 பவுன் தாலி செயின் கிடந்தது. அதை எடுத்தார். அக்கம் பக்கத்தில் பார்த்தார். சிறிது நேரம் அங்கேயே நின்றபடி, யாராவது செயினுக்கு உரிமை கொண்டாடி வருகிறார்களா என்று பார்த்தார். யாரும் வராததால் செயினுடன் வீட்டுக்கு வந்தார்.

நடந்த சம்பவத்தை மனைவியிடம் தெரிவித்து விட்டு மீஞ்சூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காளி ராஜியிடம் செயினை முருகன் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டரும் செயினை வாங்கி வைத்து கொண்டு முருகனின் நேர்மையை பாராட்டி விட்டு அவரை அனுப்பி வைத்தார். பின்னர் செயினை தவற விட்டவர்கள் பற்றி இன்ஸ்பெக்டர் விசாரித்தார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மீஞ்சூர் அண்ணா தெருவை சேர்ந்த கமலநாதனின் மனைவி நிஷாந்தி, தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்றபோது தாலி செயின் அறுந்து விழுந்து விட்டது. வீட்டுக்கு சென்றபோதுதான் செயினை காணாதது தெரிந்தது. அதிர்ச்சியடைந்தார். உடனே பள்ளிக்கு சென்ற வழியாக மீண்டும் நடந்து சென்று செயினை தவற விட்டது பற்றி விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. உடனே மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் காளிராஜ், ஏற்கனவே கூலி தொழிலாளி முருகன் ஒப்படைத்திருந்த செயினை காட்டி, ‘இதுதானா பாருங்கள்’ என்று கேட்டுள்ளார். உடனே அவரும், ‘என்னுடையதுதான்’ என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்த செயின் அவருக்கு உரியதுதானா என்பதை உறுதி செய்த பின்னர் நிஷாந்தியிடம் இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். அதே நேரத்தில் கீழே கிடந்த செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளி முருகன் மற்றும் மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நிஷாந்தியும் நன்றி தெரிவித்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

The post மீஞ்சூர் அருகே பெண் தவற விட்ட 4 பவுன் செயினை போலீசில் ஒப்படைத்த தொழிலாளிக்கு இன்ஸ்பெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Murugan ,Ambedkar ,Meenjur-Puduppet road ,Meenjur ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு