×

மனைவி, மகனை வெட்டி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 45 ஆண்டு சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் மனைவி, மகனை வெட்டி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 45 ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (28). இவருக்கு மாரி என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு மகேஷ்குமார் (7) என்ற மகன் இருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாரி இறந்துவிட்டார். இதனால் குணசுந்தரியின் உறவினரான ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையை சேர்ந்த டேஞ்சர் டேவிட் என்ற ராஜூ (36) என்பவருக்கும், குணசுந்தரிக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இதையடுத்து குணசுந்தரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவரது நடத்தையில் ராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தம்பதி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜூ, அரிவாளால் மனைவி குணசுந்தரி, அவரது மகன் மகேஷ் குமார் ஆகியோரை சரமாரி வெட்டிவிட்டு தப்பி செல்ல முயன்றபோது மாமியார் நாகவள்ளி (55) தடுத்துள்ளார். அவரையும் ராஜூ அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிசென்றார். இதில் சம்பவ இடத்திலே குணசுந்தரியும், மகேஷ்குமாரும் இறந்துவிட்டனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் நாகவள்ளி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜூவை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் மாமியார் நாகவள்ளியை கொலை செய்ய ராஜூ வந்தபோது புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் வானமாமலை மடக்கி பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞராக ஆர்த்தி வாதாடி வந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பரூக், இரட்டை கொலை மற்றும் கொலை முயற்சியில் ராஜூவுக்கு தொடர்பு இருப்பதால் 45 ஆண்டு காலம் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர், காவலர்களை நீதிபதி பாராட்டினார்.

The post மனைவி, மகனை வெட்டி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 45 ஆண்டு சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mahila court ,Thandaiyarpet ,Puduvannarpet ,Gunasundari ,Vausi ,Puduvannarappet ,Mahila ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!