×

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 82 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தமிழ்நாடு: நேற்று ஒரு வெள்ளி, 4 வெண்கலம் வென்றது

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். 81 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை கீர்த்தனா 188 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். 81 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு தமிழ்நாட்டு வீராங்கனை ஓவியா 184 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 82 பதக்கங்களுடன் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரு வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்றது.

தமிழகத்தில் 6வது ‘விளையாடு(கேலோ) இந்தியா இளையோர் போட்டி’ கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 5,500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், நீச்சல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் இறுதி போட்டிகள் நடைபெற்றன. நீச்சல் போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களும், பளுதூக்குதலில் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் தமிழ்நாடு வென்றது.

நீச்சல் போட்டியில் 400மீ. ஐ.எம். பிரிவில் ஸ்ரீநிதி நடேசன் வெள்ளிப்பதக்கமும், 50மீ. பேக் ஸ்ட்ரோக் பெண்கள் பிரிவில் தீக்சா சிவக்குமார், ஆண்கள் பிரிவில் நித்திக் நாதெல்லா வெண்கலம், தொடர் நீச்சலில் தமிழ்நாடு அணியினர் நித்திக் நாதெல்லா, நித்தீஷ், கவின் ராஜ், சங்கிவ் பிரணவ் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். பளுதூக்குதலில் 76 கிலோ எடைபிரிவில் ஹஸ்னினாஷ்ரின் வெண்கலப்பதக்கம் வென்றார். நேற்றைய முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 29 தங்கம், 19 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கத்துடன் 3வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா 44 தங்கம் உள்பட 127 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது. ஹரியானா 33 தங்கம் உள்பட 94 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.

The post கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 82 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தமிழ்நாடு: நேற்று ஒரு வெள்ளி, 4 வெண்கலம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Gallo India Games ,Chennai ,Calo India Games ,Keerthana ,Oviya ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...