×

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3ம் இடம்..!

டெல்லி : டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. நாட்டின் 75வது குடியரசு தின விழா கடந்த ஜன.26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் பங்கேற்றனர். ராணுவத்தின் பிரமாண்ட வாகனங்கள், ராணுவத்தின் மிடுக்கான அணிவகுப்புகள் இடம்பெற்றன.

குடியரசு தின விழாவின் போது அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இதில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. ‘பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை – மக்களாட்சியின் தாய்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10ம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டு, கடமைப் பாதையில் ஊர்வலம் சென்றது.

மாநிலங்கள் வாரியான பட்டியலில் ஜூரி தேர்வில் ஒடிசா முதலிடம், குஜராத் 2ம் இடம் பிடித்துள்ளன. மக்கள் தேர்வு அடிப்படையில் குஜராத் முதலிடமும், உ.பி. 2ம் இடம், ஆந்திராவுக்கு 3ம் இடம் பிடித்துள்ளன. துறைகள் வாரியான சிறந்த அலங்கார ஊர்தியாக கலாசார துறையின் ஊர்தி தேர்வு செய்யப்பட்டது.

The post டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3ம் இடம்..! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Republic Day Celebration of Delhi ,Delhi ,Tamil Nadu ,Decoration ,Republic Day Celebration ,Republic Day ,President ,Thravupathi Murmu ,Government ,Decoration Party ,Delhi Republic Day Celebration ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு