×

குமரியில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக வக்கீல்கள் எஸ்.பி.யிடம் புகார்

 

நாகர்கோவில், ஜன.30: குமரியில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என திமுக வழக்கறிஞர்கள், எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளனர். குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப் ராஜ் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் நேற்று மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டம் களியக்காவிளையில் சமீபத்தில், நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் குறித்து மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சித்து பேசினார். அவரது பேச்சுகள் திட்டமிட்டு சதி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில், குற்றமுறு வன்முறை தாக்குதலை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. எங்கள் கட்சியின் நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா கல்லறை மற்றும் கடற்கரைகளில் உள்ள மற்ற முன்னாள் முதல்வர்களின் கல்லறைகளை இடித்து எறிவேன் என பேசி கலகத்தை விளைவிக்கும் வகையில் சட்டத்துக்கு புறம்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு மிரட்டி பேசி உள்ளார்.

மேலும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசி குற்றமுறு மிரட்டல் செய்து, பொது அமைதியை மீறும் விதத்தில் பேசி மிரட்டி உள்ளார். குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்தும், அவதூறாக பேசி மிரட்டி இருக்கிறார். ஆலயத்தில் இரு பிரிவினர் இடையே நடந்த சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டும். ஒரு சமூகம் சார்ந்த மதத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மனித உரிமை மீறலை ஏற்படுத்தி, பொதுமக்கள் மத்தியில் பீதியை விளைவிக்க வேண்டுமென்ற உள் நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி உள்ளார்.

அவரது பேச்சுகள் பகைமை, வெறுப்பு, கெட்ட எண்ணம் ஆகியவற்றை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. தனது கட்சியின் மத்தியில் தீவிரவாதத்தை தூண்டும் விதத்தில் மேடையில் பேசி சமுதாய சீர்கேட்டைஏற்படுத்தி உள்ளது. எனவே சீமான் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். நிர்வாகிகள் மரிய சிசுக்குமார், வீர வர்கீஸ் மற்றும் வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஜெபா ஜாண், சவுந்தர், ஜெங்கின்ஸ் செல்வராஜன் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

The post குமரியில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக வக்கீல்கள் எஸ்.பி.யிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Kumari ,DMK ,S.B. Nagercoil ,S.B. ,Naam Tamilar Party ,Kumari West District ,Kumari: DMK ,SP ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...