×

குனியமுத்தூரில் சிறுத்தை குறித்த வதந்தி பரப்பினால் நடவடிக்கை

 

கோவை, ஜன.30: கோவை மதுக்கரை வனச்சரக உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இரவு நேரங்களில் இருப்பதாக கடந்த வாரம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அறிவுரைப்படி மதுக்கரை வனவர் தலைமையில் வன பணியாளர்கள் சுண்டக்காமுத்தூர் ரோடு, குனியமுத்தூர் ஜே.ஜே நகர், அபிராமி நகர், எம்.எஸ்.அவன்யூ, எம்.எஸ் பார்க், கேஎம்ஆர் நகர், எம்.எஸ் கார்டன் மற்றும் செங்குளம் உள்ளிட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என தொடர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின்போது எந்த ஒரு கால் தடம் மற்றும் தடயங்கள் ஏதும் தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், தனிக்குழு அமைத்து சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயங்களை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தினர். அதிலும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், குனியமுத்தூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதையடுத்து, குனியமுத்தூர் பகுதியில் தவறான தகவல்கள் பகிர்ந்து, வீண் வதந்திகளை பரப்பி பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

The post குனியமுத்தூரில் சிறுத்தை குறித்த வதந்தி பரப்பினால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kuniyamuthur ,Coimbatore ,Coimbatore Madhukarai Forest ,District Forest Officer ,Madhukarai forester ,
× RELATED கோவையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!!