×

நாடு முழுவதும் சிஏஏ சட்டம் 7 நாளில் அமல்: ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேச்சு

கொல்கத்தா: ‘மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் அடுத்த ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்’ என ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட மத துன்புறுத்தல்களுக்கு ஆளான முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை ஒன்றிய பாஜ அரசு இயற்றியது. இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கொல்கத்தாவில் செய்தி டிவி சேனல் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிஏஏ சட்டம் ஒன்றிய பாஜ அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். அடுத்த 7 நாட்களில் இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இது எனது உத்தரவாதம்’’ என கூறி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சாந்தனு தாக்கூர் கடந்த வாரமும் கூறி உள்ளார். சிஏஏ அமல்படுத்துவது தவிர்க்க முடியாதது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

* திரிணாமுல் கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ‘‘மேற்கு வங்காளத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது என்று எங்கள் கட்சி தலைவர் மம்தா தெளிவாகக் கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசியல் வித்தைக்கு பாஜ தலைவர்கள் முயற்சிக்கின்றனர்’’ என்றார்.

The post நாடு முழுவதும் சிஏஏ சட்டம் 7 நாளில் அமல்: ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Kolkata ,Shantanu Thakur ,West Bengal ,Bangladesh ,
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்