×

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி அனுமதி பெறப்பட்டதா?: ஐகோர்ட் பதிவாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

புதுடெல்லி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த வில்லிபுத்தூர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை எனக்கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தாமாக முன்வந்து வழக்கை பட்டியலிட்டு விசாரிக்கிறார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹச் ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒப்புதல் இல்லாமல் ஒரு தனி நீதிபதி தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இது நீதிமன்ற சட்ட நடைமுறைக்கு எதிரானதாகும். குறிப்பாக இதுபோன்ற விவகாரங்களில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் இருக்கும் போது தனி நீதிபதி விசாரிக்க அதிகாரம் கிடையாது.  மேலும் முறையாக முடித்துவைக்கப்பட்ட வழக்குகளில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. உரிய விசாரணைக்கு பிறகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று தான், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறாரா. அல்லது தன்னிட்சையாக விசாரிக்கிறாரா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அதுசார்ந்த விவரங்கள் கூடிய அறிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தனர்.

The post அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி அனுமதி பெறப்பட்டதா?: ஐகோர்ட் பதிவாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR Ramachandran ,Supreme Court ,Courts ,New Delhi ,Villiputhur court ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...