×

செங்கல்பட்டில் நெகிழ்ச்சி சம்பவம் பச்சிளங்குழந்தைக்கு கொசுவலை,மெத்தை: இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்

செங்கல்பட்டு, ஜன.30: செங்கல்பட்டில் சாலையோரம் பொம்மை வியாபாரம் செய்யும் வடமாநில தம்பதியின் பச்சிளங்குழந்தைக்கு அப்பகுதி இன்ஸ்பெக்டர் கொசு வலையுடன் கூடிய பஞ்சு மெத்தை வாங்கி தந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள ராட்டினங்கிணறு பகுதியில் சாலையோரம் பொம்மை வியாபாரத்தில் ஈடுபடும் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.

இதில், ஒருசில பெண்கள், இரவு நேரங்களில் தங்களின் பச்சிளங்குழந்தைகளுடன் பிளாஸ்டிக் கோணி கூடாரத்தில் கொசுக்கடியில் அவதியுடன் தூங்குவது வழக்கம். இந்த அவலக் காட்சிகளை வல்லம், ஆலப்பாக்கம், திருப்போரூர் கூட்டு சாலையில் ரோந்து பணியின்போது செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனது ஓட்டுநருடன் ஜீப்பில் சென்றபோது பார்த்து வேதனையடைந்தார்.

இந்நிலையில், நடைபாதையில் கொசுக்கடியில் தூங்கும் பச்சிளங்குழந்தைகளின் நலன் கருதி, நேற்று முன்தினம் மாலை தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனது ஓட்டுநர் சதீஷ் உதவியுடன் சாலையோரத்தில் வசித்த வடமாநில குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கு கொசு வலையுடன் கூடிய பஞ்சு மெத்தைகளை அன்பளிப்பாக வழங்கினார். இதற்கு அங்கு வசித்த வடமாநில குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post செங்கல்பட்டில் நெகிழ்ச்சி சம்பவம் பச்சிளங்குழந்தைக்கு கொசுவலை,மெத்தை: இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : Sengalpattil ,Chengalpattu ,Ratinanginaru ,Chengalpattu Nagar ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...