×

2,41,861 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி: கவர்னருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்றதும் 2,41,861 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி கவர்னருக்கு பதில் அளித்துள்ளார். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவது தொடர்பாக சில கருத்துகளை தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புள்ளி விவரங்களோடு அளித்துள்ள பதிலறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 75 பயனாளிகள் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். மீதமுள்ள 52 பயனாளிகளால் வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒன்றிய அரசால் 31,051 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டு 23,110 வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. ­­

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்ட ஒன்றிய அரசு நிர்ணயித்த தொகை ரூ.1.20 லட்சம். இத்திட்டத்தில் ஒன்றிய அரசு தன் பங்காக ரூ.72 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது. ஆனால், ஊரகப் பகுதி மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மாநிலத்தின் நிதி பங்களிப்பாக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் வழங்குகிறது. இதனுடன் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் மூலம் ரூ.26,460, தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.12 ஆயிரம் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு வீட்டின் அலகுத் தொகை ரூ.2,78,460 ஆக உள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் தான் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அதிக தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு பதவியேற்றவுடன் 2,41,861 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஏற்கனவே அனுமதி வழங்கி முடிவுறாமலிருந்த வீடுகளையும் சேர்த்து 2021 மே 7க்கு பின் இதுவரை 2,93,277 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பதவியேற்ற நாளான 2021ம் ஆண்டு மே 7ம் தேதிக்கு பிறகு அலகு தொகையாக ஒன்றிய அரசு நிதியிலிருந்து ரூ.2933.31 கோடி வரப்பெற்றுள்ளது. மாநில அரசு இத்திட்டத்திற்கு ரூ.3116.54 கோடி நிதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்மணி ஊராட்சியில் மொத்தம் 66 குடிசை வீடுகள் தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்காணும் குடிசை வீடுகள் தமிழ்நாடு அரசின் ஊரக குடியிருப்பு திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகளாக இனி வரும் காலங்களில் மாற்றப்படும். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் தொடர்ந்து செயல்படும் இந்த திராவிட மாடல் அரசு, ஊரகப் பகுதி மக்களுக்கு தேவையான வீடு கட்டும் திட்டத்தினை தொடர்ந்து திறன்பட செயல்படுத்தும்.

The post 2,41,861 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி: கவர்னருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister I. Periyasamy ,Governor ,CHENNAI ,DMK government ,Tamil Nadu ,Minister ,Periyasamy ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...