×

அனுமான் கொடி அகற்றியதை கண்டித்து கர்நாடகா முழுவதும் பாஜவினர் போராட்டம்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

பெங்களூரு: அனுமான் கொடி அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்த சம்பவம் நடந்தது. மாநிலத்தின் மண்டியா மாவட்டம், நாகமங்கலா தாலுகா, கெரகோடு கிராமத்தில் 108 அடி உயரமான கொடி கம்பத்தில் அனுமான் கொடி ஏற்றப்பட்டது. அரசு நிலத்தில் அனுமதி பெறாமல் கொடி ஏற்றியதாக கூறி போலீசார் கொடியை அகற்றினர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து அறக்கட்டளை மற்றும் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். கெரகோடு கிராமத்தில் நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது.

மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, இந்துகளுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையல், கெரகோடு கிராமத்தில் அனுமான் கொடி இறக்கிய சம்பவத்தை மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக திருப்ப முடிவு செய்தனர். அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மண்டியாவில் பாஜவினர் நடத்திய போராட்டத்தில் முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவருமான எச்.டி.குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோலார் மாவட்டத்தில் போராட்டம் நடத்தியவர்கள் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததுடன் சிலரை கைது செய்தனர். மேலும் பல மாவட்டங்களிலும் போலீசார் தடியடி நடத்தி பாஜவினரை கலைத்தனர்.

* மதவெறியை தூண்டும் பாஜ

முதல்வர் சித்தராமையா கூறும்போது, மண்டியா மாவட்டம், கெரகோடு கிராமத்தில் தேசியகொடி மற்றும் மாநில கொடி ஏற்றுவதாக கூறி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, இரவோடு இரவாக 108 அடி உயர அனுமான் கொடி ஏற்றினர். அனுமதி பெறாமல் ஏற்றப்பட்ட கொடி அகற்றப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. மத அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பாஜ மற்றும் அதன் ஆதரவு இந்து அமைப்புகள் மதவெறியை தூண்டி மக்களை பிளவுப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.

The post அனுமான் கொடி அகற்றியதை கண்டித்து கர்நாடகா முழுவதும் பாஜவினர் போராட்டம்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Hanuman ,Bengaluru ,Bharatiya Janata Party ,Mandya district ,Nagamangala taluk ,Kerakode ,Dinakaran ,
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...