×

அரசு விதிகளை மீறி கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த 6 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

சென்னை: சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய நவீன பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அங்கிருந்து அனைத்து தென்மாவட்ட அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது. அனைத்து பயணிகளையும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஏற்றி செல்ல வேண்டும். தடையை மீறி பயணிகளை ஏற்றி செல்லும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், கோயம்பேட்டில் இருந்து அரசு விதிகளை மீறி ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி சென்று வருவதாக நேற்று முன்தினம் வட்டாரப் போக்குவரத்து இணை கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காவேரி தலைமையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி அருகே, நசரத்பேட்டை பகுதியில் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வெளிமாநிலங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த 2 ஆம்னி பேருந்துகளை மடக்கி சோதனை செய்தனர். இதில், அப்பேருந்து கிளம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படாமல் கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 ஆம்னி பேருந்துகளையும் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அப்பேருந்துகளில் இருந்த பயணிகளை மாற்று வாகனத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து பூந்தமல்லி, வானகரம், கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் அரசு விதிகளை மீறி பயணிகளை ஏற்றி வந்த 6 ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.

The post அரசு விதிகளை மீறி கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த 6 ஆம்னி பஸ்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,CHENNAI ,Klambach ,Vandalur, Chennai ,South district ,Koyambedu ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை