×

வீட்டுவசதி வாரியத்தில் விற்காமல் உள்ள 3,000 வீடுகளை வாடகைக்கு விட நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: வீட்டுவசதி வாரியத்தில் விற்காமல் உள்ள 3 ஆயிரம் வீடுகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று கிரெடாய் என்றழைக்கப்படும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (தமிழ்நாடு பிரிவு) மாநாட்டை அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குநர் கணேசன், டெக்டன் குழும நிர்வாக இயக்குநர் லட்சுமணன், கிரெடாய் நேஷனல் தென்மண்டல துணை தலைவர் ஸ்ரீதரன், கிரெடாய் தமிழ்நாடு தலைவர் இளங்கோவன், ஸ்டேட்கான் 2024 தலைவர் ஹபீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், ‘‘சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வருவது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்து வருகிறது. குறிப்பிட்ட கால நேரத்திற்குள் திட்ட அனுமதிக்கு முறையாக ஆவணங்களை சமர்ப்பிப்பது தாமதமாவதால் அனுமதி அளிக்க காலதாமதமாகிறது’’ என்றார். வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டியில், தமிழகத்தை பொறுத்தவரை 8 இடங்களில் மாஸ்டர் பிளான் நடைமுறையில் உள்ளது. 7 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 19 சதவீதமாக மாறி உள்ளது.

அதை 22 சதவீதம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை தனியார் வசம் கொடுக்க உள்ளதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் தனியார் குடியிருப்புகளை விட விலை குறைவாக தான் உள்ளது. தற்போது வரை வீட்டு வசதி வாரியத்தில் விற்காமல் 3000 வீடுகள் உள்ளன. அதை விற்பதற்கான நடவடிக்கையை எடுத்து கொண்டு வருகிறோம். மேலும், விற்காத வீடுகளை வாடகை விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.

The post வீட்டுவசதி வாரியத்தில் விற்காமல் உள்ள 3,000 வீடுகளை வாடகைக்கு விட நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthuswamy ,Chennai ,Housing Board ,Federation of Real Estate Developers Association of India ,Tamil Nadu ,Chapter ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்