×

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் டெல்லி வீட்டிலிருந்து மாயம்

புதுடெல்லி: நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவரது டெல்லி வீட்டிலிருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் நில மோசடி தொடர்பாக 7 முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, 8வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள சோரன் வீட்டில் வைத்து அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை ஜனவரி 29 மற்றும் 31ம் தேதிகளில் எப்போது விசாரணைக்கு ஆஜராவீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு சோரனிடம் கேட்டுக் கொண்டிருந்தது. இதற்கு பதிலளிக்காத ஹேமந்த் சோரன் நேற்று முன்தினம் திடீரென திட்டமிடப்படாத பயணமாக டெல்லி சென்றார். இந்த வழக்குகளில் தன்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தடுக்க ஹேமந்த் சோரன் டெல்லியில் தனது வழக்கறிஞருடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தகவல் அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 9 மணி அளவில் தெற்கு டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. இதனால் ஜார்க்கண்ட் பவன் உள்ளிட்ட இடங்களுக்கும் அதிகாரிகள்விரைந்தனர். எங்கேயும் சோரன் இல்லை.  சோரனின் டிரை வருக்கும் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. எனவே அவர் எங்கிருக்கிறார் என்பதை அமலாக்கத்துறையால் உறுதிபடுத்த முடியவில்லை.

டெல்லியில் இருந்து ஹேமந்த் சோரன் ரகசியமாக ஜார்க்கண்ட் சென்று விடாமல் தடுப் பதற்காக டெல்லி விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டது. இரவு வரையிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காத்தி ருந்தும் சோரன் வரவில்லை. இதற்கிடையே, அவர் நாளை ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என இமெயில் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையால் மாநில முதல்வரே மாயமான சம்பவம் தேசிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ராஞ்சியில் போராட்டம்
டெல்லியில் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு அமலாக்கத்துறை சென்றதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் முதல்வர் மாளிகை, ஆளுநர் மாளிகை, ஒன்றிய அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முதல்வர் சோரன் எங்கிருக்கிறார் என தங்களுக்கே எதுவும் தெரியவில்லை என அரசு உயர் அதிகாரிகளும் கூறி உள்ளனர்.

* ‘உன்னிப்பாக கவனிக்கிறேன்’
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில் ஒட்டுமொத்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்பதெல்லாம் வெறும் யூகமே. இதில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது. யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இன்று இல்லாவிட்டால் நாளை முதல்வர் பதிலளிக்க வேண்டும். ஜார்க்கண்ட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை’’ என்றார்.

The post அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் டெல்லி வீட்டிலிருந்து மாயம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Chief Minister ,Soren ,Delhi ,Enforcement Directorate ,New Delhi ,Hemant Soran ,Soran ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு; மாஜி...