×

பகவத்கீதை உரை: தொடர்பு வேறு, பற்று வேறு!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 64

(பகவத்கீதை உரை)

பொறாமை எவ்வாறு உருவாகிறது? தனக்குக் கிடைப்பது தன்னுடைய தகுதிக்குக் குறைவானது என்ற கற்பனை எண்ணத்தால் உருவாகிறது. தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோஷப்படத் தெரியாமல், பிறருக்குக் கிடைத்ததைப் பார்த்து, நமக்குக் கிடைத்ததைவிட அது அதிகமானது என்ற ஒப்பீட்டுக் கணக்கீட்டால் உருவாகிறது. தன் தகுதியையும் மீறி, தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போவதில் ஒன்றும் நமக்கு வருத்தம் இல்லைதான்; ஆனால், அது அடுத்தவருக்குக் கிடைத்துவிடுகிறதே, அதுதான் வேதனை!

இதுதான் பொறாமையின் விதை. ஆனால், ஞானியின் மனதில் இந்த விதை ஊன்றுவதேயில்லை. தனக்குக் கிடைத்ததில் அவனுக்கு திருப்தி ஏற்படுவது போலவே, அடுத்தவருக்குக் கிடைப்பதில் அக்கறை காட்ட அவனுக்குத் தோன்றுவதேயில்லை. பகவான் இதை எனக்கு அளித்திருக்கிறார்; அவனுக்கு அதை அளித்திருக்கிறார் என்று பகவான் கருணையை மட்டுமே எண்ணுகிறார். பகவான் அளிப்பதில் தனக்கும், அடுத்தவருக்கும் இடையே எந்த மதிப்பு ஏற்றத் தாழ்வையும் அந்த ஞானியால் ஒப்பிட முடியவில்லை.

நோயுற்றிருக்கும்போது ஒருவன் எல்லா தெய்வங்களையும் வேண்டுகிறான்; தன்னை குணப்படுத்துமாறு இறைஞ்சுகிறான். இது உடல் பலவீனத்தால், அது விரைவாக குணமடைந்துவிட வேண்டுமே என்ற எதிர்பார்ப்பால் தோன்றும் ஓர் உத்தி. அந்தக் கட்டத்தில் தன்னைப் பிழைக்க வைக்க அந்தக் கடவுளைத் தவிர யாராலும் முடியாது என்ற நம்பிக்கை, அதைவிட பயம். அவனுடைய நோயும் அது தரும் வலியும் தன்னைச் சார்ந்திருப்பவர்கள் மீதும், ஏன் மருத்துவர் மீதும் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன. அதே அவனுக்குப் பொருள் நஷ்டம் ஏற்பட்டதென்றால், வசதிகள் குறைந்தனவென்றால் உடனே எல்லா தெய்வங்களையும் திட்ட ஆரம்பித்துவிடுகிறான்! ஏனென்றால், தான் பெறுவது அனைத்தும் இறைவனின் அருளால் என்று அவன் நம்பிக் கொண்டிருந்திருக்கிறான்!

உடனிருப்பவர்களை அந்த நஷ்டத்துக்காகத் திட்டினாலும், கோபம் கொண்டாலும், ஏன் வழக்கே போட்டாலும், அந்த ஒவ்வொரு செயலுக்கும் சமமான, சிலசமயம் கூடுதலான எதிர்விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. அதனால், சுலபமான எச்சு இலக்கு கடவுள்தான்! இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. அவ்வாறு, தான் ஏசுவதால், ஒருவேளை கடவுள் தன் நஷ்டத்தை ஈடுசெய்துவிட மாட்டாரா.. வேறு ஏதாவது ஒரு வகையில் லாபம் அளிக்கமாட்டாரா.. என்ற எதிர்பார்த்தலும் அந்த வசவில் ஒளிந்திருக்கும்! ஆனால், என்னதான் வேண்டிக் கொண்டாலும் சரி, பகவான் எப்போது நினைக்கிறாரோ, அப்போதுதான், தான் குணமடைய முடியும் என்பதையும், பகவான் நினைப்பதால்தான் தனக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவன் உணர்வானானால், இறைஞ்சுதலும் இருக்காது, ஏசுதலும் இருக்காது.

கடலிலிருந்து அலைகள் புரண்டோடி வந்து கரையை நனைக்கின்றன, பிறகு பின்வாங்கிச் சென்றுவிடுகின்றன. மீண்டும் வருகின்றன, செல்கின்றன. அலைகள் எதை எதிர்பார்த்து கரைக்கு வருகின்றன, எதிர்பார்த்த எது கிடைக்காததால் திரும்பிச் செல்கின்றன? அலையின் கர்மா கரையை நோக்கிச் செல்வதும், திரும்புவதும்தான். இந்த கர்மாவில் எந்த எதிர்பார்த்தலும் இல்லை, ஏமாற்றமும் இல்லை.

கரையில் அமர்ந்திருப்பவர்களுக்குக் குளிர்ச்சியான தென்றலைத் தந்துவிட்டு அலைகள் திரும்புகின்றன. அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பதில் அவை மகிழ்ச்சியடைவதில்லை. ஏனென்றால், அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது அலைகளின் நோக்கம் இல்லை. அதேபோல, சுனாமியாக அலை விஸ்வரூபம் கொள்ளும்போது கரையில் இருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உடைமைகள், உயிர்கள் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். இதற்காகவும் அந்த அலைகள் வருத்தப்படுவதில்லை. அந்த சமயத்தில் அலை அத்தகைய கர்மாவை இயற்றவேண்டியிருந்தது, இயற்றியது, அவ்வளவுதான். நஷ்டம் ஏற்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு அலைக்கு இல்லை. அதைப் பொறுத்தவரை சுனாமியாக பிரமாண்டம் கொள்வதும் ஒரு கர்மாதான்!

ஓட்டப் பந்தய வீரன் ஒருவன் ஒவ்வொரு போட்டியிலும் தவறாது வெற்றியும், பதக்கங்களும் பெறுவான். வெற்றியும், பதக்கமும் அவனுடைய இலக்கு என்பது மேலோட்டமாகத் தெரிந்தாலும், ஓர் உண்மையான விளையாட்டு வீரன், தான் போட்டியில் பங்கேற்பதை மட்டுமே பிரதானமாகக் கருதுகிறான். இத்தகையவனால்தான் தனக்குத் தோல்வி ஏற்படும்போது அந்த வலியை உணராமல் இருக்க முடிகிறது. தன்னை மீறி வென்றவரைப் பாராட்டவும் முடிகிறது! ஆக, இரு நிலைகளிலும் ஒரே மனநிலையில் இருப்பவனும், எதையேனும் சாதித்தாலும் அல்லது சாதிக்காவிட்டாலும் தன் சுயம் பிறழாமல் இருப்பவனும், தான் இயற்றும் கர்மங்களால் எந்த வகையிலும் பந்தப்படுவதில்லை என்று அர்ஜுனனுக்குச் சொல்கிறார் கிருஷ்ணன்.

கதஸ்ங்கஸ்ய முக்தஸ்ய ஞானாவஸ்திதசேதஸ
யக்ஞாயாசரத கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே (4:23)

‘‘எதிலும் பற்றற்றவனாய், ஞானத்தில் திடமான சித்தம் உடையவனாய், தன் கடமையை ஒரு யக்ஞமாகச் செய்பவனாய் திகழும் ஒருவன் இயற்றும் கர்மாக்கள் எதுவும் எந்தக் கேட்டையும் விளைவிக்காது!’’ பற்று எதில் வேண்டுமானாலும் வரலாம், யார் மீதும் வரலாம். அது மனதின் இயல்பு. ஆனால், அதைப் பற்றிக் கொண்டே இருக்காததும், சட்டென விலகி விடுதலும், மனதுக்கும் மீறிய ஒரு ஞானியின் இயல்பு. ‘தன்னுடையது’ என்று எதில் உரிமை கொண்டாடினாலும் அதில் பற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

உலகியல் துன்பங்களுக்கு இதுதான் காரணம். நமக்கு உரிமையாயிருப்பவற்றுடன் நாம் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கலாமே தவிர, பற்று வைத்துக் கொள்வது கூடாது என்பது பகவான் கிருஷ்ணனின் அறிவுரை. தொடர்பு அற்றுப் போனால் அது காலப்போக்கில் மறதியின் கணக்குக்குப் போய்விடும். ஆனால், பற்று ஏற்படுமானால் அது எத்தனை காலமானாலும் நினைவின் கணக்கிலேயே தங்கி விடும்.

அலைக்கழிக்கச் செய்யும் ஆற்றல் பற்றுக்கு உண்டு. ‘மழையில் நனைத்து, வெயிலில் வாட்டி…’ என்று சொல்வார்களே அதுபோன்ற அவலம். ஒரு விஷயத்தில் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்றால் இன்னொரு விஷயம், துக்கத்தை சுமந்து வருகிறது! இதுவே வாழ்க்கை முறையாகிவிட்டது. அதேசமயம் இதுதான் வாழ்க்கை என்று பல அனுபவங்கள் நமக்கு உணர்த்திய பின்பும் சந்தோஷப்படாமலோ, துக்கப்படாமலோ நடுநிலையாக இருக்க முடிகிறதா, இல்லையே! ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது. வீட்டு உரிமையாளன் பதறித் துடிக்கிறான். ‘அய்யோ, நான் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடாயிற்றே, இப்படி அநியாயமாக அழிந்து போகிறதே!’ என்று கதறுகிறான்.

அப்போது அவனுடைய மகன் அவனிடம் ஓடோடி வந்து, ‘அப்பா, கவலைப்படாதீர்கள். இந்த வீட்டை நாம் கட்டியபோதே இன்ஷூர் செய்திருக்கிறோம். நீங்கள் மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது. நமக்கு நஷ்டமில்லை, இழந்த வீட்டுக்கான ஈடு நமக்குக் கிடைத்து விடும்,’ என்று சொல்லி ஆறுதல்படுத்துகிறான். வீட்டுச் சொந்தக்காரனுக்கு இப்போது மகிழ்ச்சி. மறுபடியும் புதிதாகத்தான் வீடு கட்ட வேண்டும் என்றாலும், செலவு குறித்து கவலை இல்லை, அல்லவா? ஆனால், இன்ஷூரன்ஸ் கம்பெனியோ, அவன் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதோ வில்லங்கம் இருப்பதால் ஈட்டுத் தொகை கொடுக்க முடியாது என்று கை விரித்துவிடுகிறார்கள்.

இப்போது வீட்டு சொந்தக்காரன் மீண்டும் ஒப்பாரி வைக்கிறான். இழந்தபோது அழுகை, அது மீண்டுவிடும் என்று தெரிந்தபோது சந்தோஷம், மீளாது என்று தெரியவந்தபோது மறுபடி அழுகை! எதனால் இப்படி? வீட்டின் மீது வைத்திருக்கும் பற்றால்தான். சொந்த வீட்டின் மீது பற்றில்லாமல் இருந்துவிட முடியுமா என்று கேட்கலாம். முடியாதுதான். ஆனால், அந்த வீட்டைத் தீப்பற்றாதபடி கட்டி முடித்திருந்தால் இழப்பு இல்லை அல்லது முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, எந்தக் கையூட்டும் கொடுக்காமல் இன்ஷூர் செய்திருந்தால், எந்த காரணத்துக்காகவும் அந்த வீடு தீப்பற்றியிருந்தாலும், நஷ்ட ஈடாவது கிடைத்திருக்கும்.

அதாவது, செய்யும் கர்மாவில் பூரணத்துவம் இல்லாதபோதுதான் சந்தேகமும், பயமும், தகுதிக்கு மீறிய எதிர்பார்த்தலும் உருவாகும். துரதிருஷ்டவசமாக அந்த விளைவுகளும் அழிவுபூர்வமாகவே அமையும். அதனால்தான் எதிலும் பற்றற்றவனாய், ஞானத்தில் திடமான சித்தம் உடையவனாய், தன் கடமையை ஒரு யக்ஞமாகச் செய்பவனாய் ஒருவன் திகழ வேண்டும் என்று பரமாத்மா அர்ஜுனனுக்குச் சொல்வதாக நமக்கு அறிவுறுத்துகிறார்.

ஒருவன் தன் செயல்களில் பற்றற்று ஈடுபடுவானேயானால் அவனுடைய வாழ்க்கையே யக்ஞமாகிவிடுகிறது. இப்படி அற்றுப் போன பற்றால், அவனுடைய ‘நான்’ என்ற சுயம் காணாமல் போய்விடுகிறது. அப்படிப் போய்விடும்போது ‘என்னுடைய’ என்ற உரிமையும் அடிபட்டு விடுகிறது. ‘நான்’, ‘என்னுடைய’ என்ற தற்குறிகள் மறையும்போது பரந்தாம அனுபவம் கிட்டுகிறது. மோகங்கள் ஒழிந்த நிர்மலமான நீலவான மோனநிலையை எட்ட முடிகிறது. அதுவே பேரானந்த பூரணத்துவத்துக்கும் காரணமாகிறது என்கிறார் கிருஷ்ணர்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், எளிதான ஓர் உதாரணம் சொல்கிறார். பலாப்பழத்திலிருந்து சுளைகளைப் பிரித்து எடுக்கும்போது நம் உள்ளங்கைகளிலும், விரல்களிலும் எண்ணெயைத் தடவிக் கொள்கிறோம். இப்படிச் செய்வதால், பழத்தின் பிசின் கைகளில் ஒட்டிக் கொள்ளாது, சுளைகளும் எளிதாகப் பிரியும். இந்த எண்ணெய் போன்றதுதான் பரமாத்மா பற்றிய எண்ணம். இது நமக்குப் பாதுகாப்புக் கவசம். பிசின் ஒட்டாமல் பலாச்சுளைகளைப் பிரித்தெடுக்க உதவும் எண்ணெயைப் போல.

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர்
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா (4:24)

‘‘எல்லாமே பிரம்மம்தான். ஒரு யாகம் நடத்தப்படுகிறது என்றால், அந்த யாகத்தில் சமர்ப்பிக்கப்படுபவை எல்லாம் பிரம்மம்தான். யாகத்தில் தோன்றும் அக்னிபிரம்மம், அந்த யாகத்தை இயற்றுபவனும் பிரம்மம். யாகத்தின் பலனான அவிஸை ஏற்பதும் பிரம்மம்!’’ தன்னிலிருந்து விலகி நிற்கும் எதுவுமே பிரம்மம்தான். ‘தானி’லிருந்து விடுபடும் எதுவுமே பிரம்மம்தான். ‘இந்த யாகத்தை ஒருவன் இயற்றுகிறான். இந்த ஹோமத்தில் தீ தோன்றுகிறது.

அதற்கு நெய் முதலான பொருட்கள் ஆஹுதியாக இடப்படுகின்றன. யாக நிறைவில் அக்னி மூலமாக ஒரு தேவதை அதன் பலனைப் பெறுகிறது. இது பொதுவான விளக்கம். ஆனால், இயற்றுபவன் வெளிப்படுவது, இடப்படுவது, பலன் பெறுவது எல்லாமே பிரம்மம்தான் என்ற நிலையை அடைபவனே ஞானி.

நம்மிலிருந்து ‘நானை’ விலக்குவது எப்படி? ‘தன்னைப் போலவே பிறரையும் நினை’ என்பதிலிருந்து தொடங்கலாம். எது ஒன்று கிடைத்தாலும், நமக்கென்று அது வரும்போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம், உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்? அதேபோல, அடுத்தவருக்கு ஒன்று கிடைத்தால் அப்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம், உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறோம்? வித்தியாசம் இருக்கிறது.

நாம் சம்பாதித்ததெல்லாம் நம் உழைப்பின் பலன் என்று சொல்லிக் கொள்ளும் நாம், அடுத்த வீட்டுக்காரன் அனுபவிக்கும் வசதியையெல்லாம் ‘தவறான வழியில் சம்பாதித்ததாக இருக்கும்’ என்று சொல்கிறோம். அவன் அனுபவிக்கும் வசதிகளை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதேசமயம், நாம் அனுபவிப்பதை அவனாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் யோசிப்பது இல்லை. நம்மைப் போலவே அடுத்தவரையும் நினைப்பது என்பதை இதிலிருந்து ஆரம்பித்தாலே போதுமானது.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பகவத்கீதை உரை: தொடர்பு வேறு, பற்று வேறு! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னியா ராசி குழந்தையை வளர்ப்பது எப்படி?