×

பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம்முடைய பாரத நாட்டில் பல பலச் சமயங்கள் இருக்கின்றன. பல விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. ஆனால் இத்தனை வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படையாக வேதம் இருக்கிறது. வேதத்தை வேதவியாசர் நான்கு வேதங்களாகத் தொகுத்துக் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும். வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, நம்முடைய வாழும் முறையும் வழிபாட்டு முறையும் அமைந்திருக்கிறது.

நான்கு வேதங்களையும் இறைவனின் மூச்சுக் காற்றாக நாம் கொள்கின்றோம். வேதம் வேறு; இறைவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். வேதம், இறைவனைக் காட்டித் தருகிறது. இறைவன் வேதத்தை நமக்கு காட்டித்தந்தான். “பரம கருணையினால் வேதத்தை அருளிச் செய்தான்” என்று ஆசாரிய ஹ்ருதயசூத்ரக்காரர் சொல்லுகின்றார். வேதம், எல்லோருக்கும் விளங்காது. அதற்காக இதிகாச புராணங்கள் படைக்கப்பட்டன. இதிகாசங்கள் இரண்டு. ஒன்று ராமாயணம். இன்னொன்று மகாபாரதம். மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று போற்றப்படுகிறது. மஹாபாரதத்தில் எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருந்தாலும் மிக முக்கியமான இரண்டு சிறப்புக்களை குறிப்பிட வேண்டும்.

1.பகவத்கீதை.

2.விஷ்ணு சகஸ்ரநாமம்.

பகவத் கீதை என்பது சகல உபநிடதங்களின் சாரமாக, பகவான் கிருஷ்ணரால் அர்ஜூனனுக்குச் சொல்லப்பட்டது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது பகவானான கண்ணனை, எதிரே அமரவைத்து, தர்மபுத்திரனை ஒரு காரணமாகக் கொண்டு பீஷ்மாச்சாரியார் சொன்னது. அப்படிச் சொல்லும் போது பல ரிஷிகள் இருந்தனர். வேதத்தைத் தொகுத்துக் கொடுத்த வியாச மகரிஷியும் அருகில் அமர்ந்திருந்தார். ஸகஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ர நாமத்தைத் தான் குறிக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் எப்படி அவதரித்தது என்கிற பின்னணியைப் பார்க்கவேண்டும்.

குருசேத்திர யுத்தம் முடிவு பெற்றது. கௌரவர்கள் அனைவரும் அழிந்து போயினர். பாண்டவர்கள் பக்கலிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. பஞ்ச பாண்ட வர்களும் மற்றும் ஒரு சிலரும் மட்டும் இருந்தனர். தர்மபுத்திரன் மிகவும் கவலை அடைந்தான். போரில் வெற்றி பெற்ற பின்பும் அவனுக்கு நிம்மதி இல்லை. தவித்தான். கண்ணனிடம் போனான். ‘‘போரில் வெற்றி பெற்றும் எனக்கு எந்த நிம்மதியும் இல்லை. எனவே என் மனக் கவலைக்கு ஒரு மருந்து சொல். நான் உன்னையே நம்பி இருக்கிறேன். என்னுடைய கவலை தீர ஏதாவது ஒரு வழியைச் சொல்’’ என்று கண்ணனிடம் வேண்டினான்.

கண்ணன் சிரித்துக் கொண்டே, ‘‘உன்னுடைய கவலைக்கு என்னால் வழி சொல்ல முடியாது. ஆனால் யார் வழி சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அவரிடம் கேட்போம்’’ என்று சொன்னான். தர்மபுத்திரன், “சீக்கிரம் சொல்… இந்தக் கவலையைத் தீர்க்க வந்தவர்கள் யார்? சொல்” உடனே கண்ணன், அவனை, குற்றுயிரும் கொலையுயிருமாக அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரிடம் அழைத்துச் சென்றான்.

உத்தராயண காலத்தில் உயிர் விடுவதற்காகக் காத்திருந்த பீஷ்மாச்சாரியாரிடம் தர்மபுத்திரன் அழுதான். ‘‘நான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய மனது நிம்மதி இல்லாமல் இருக்கிறது. எனக்கு ஏதேனும் ஆறுதல் சொல்ல வேண்டும்’’ என்று கேட்டான். பீஷ்மர், “கலங்காதே. எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்திருக்கிறது. இதில் உன் தவறு ஏதும் இல்லை. இது பகவான் சித்தம்.

பகவானின் சித்தத்தைத்தடுப்பதற்கு நாம் யார்?” என்று ஆறுதல் சொன்னார். கண்களைத் துடைத்துக் கொண்டு தருமபுத்திரன் கேட்டான். “பிதாமகரே! எனக்கு எப்படி நிம்மதி கிடைக்கும்? என்னுடைய ஆன்மாவுக்கு எப்போது நற்கதி கிடைக்கும்? நான் கவலையிலிருந்து எப்படி விடுபட முடியும்? உபாயத்தைச் சொல்ல வேண்டும்”

‘‘சாட்சாத் கண்ணபிரானைத் துணையாக அடைந்த உங்களுக்கு எந்தக் கவலையும் வராது’’ என்று பீஷ்மர் சொன்னதோடு, தர்மம் நிலைகுலைவதால் ஏற்படப்போகும் அவலங்களையும் எடுத்துச் சொன்னார்.

‘‘தர்மம் குலைந்தால் உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை நேர்மை இருக்காது. மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள். படித்தவன் சூதும் வாதும் செய்வான்.

மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவரக் காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்.” இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல, பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.

“அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்” என்று பீஷ்மர் கைகாட்ட, கிருஷ்ணனோ, “நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட, உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்” என்று சொன்னார். அப்போது சொன்னதுதான் “ விஷ்ணு சஹஸ்ரநாமம்…!” அதாவது, எம்பெருமான் மந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பது தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமை. விஷ்ணுசகஸ்ர நாமம் என்று பதத்தைப் பிரித்தால், “விஷ்ணு வினுடைய ஆயிரம் நாமங்கள்’’ என்று பொருள் வரும்.

ஆழ்வார், பகவான் விஷ்ணுவை துதிக்கின்ற போது “பேர் ஆயிரம் உடைய பெரியோன்” என்று துதிக்கிறார். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்று சொன்னால். `சகஸ்ரம்’ என்றால், பொதுவாக ஆயிரம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுகின்றோம். சகஸ்ரம் என்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதாவது எண்ணற்ற என்ற பொருளும் உண்டு. பகவானின் நாமம் இத்தனைதான் என்று யாரால் சொல்ல முடியும்?

நாளைக்கே பகவானுக்கு யாராவது ஒருவர் ஒரு புதியதாகப் பெயர் வைத்தாலும், அந்தப் பெயரை அவன் ஏற்றுக் கொள்கின்றான். ‘‘தமர் உகந்தது எவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப் பேர்’’ என்று ஆழ்வார் சொல்கின்றார். ஒருவன் ஆசையோடு பேர் சொல்லி அவனைக் கூப்பிட்டால் அந்தப் பேரையும் அவன் ஏற்றுக் கொள்ளுகின்றான். ஒரு ஆச்சாரியார் கண்ணனுக்கு வெண்ணைக்காடும் பிள்ளை என்று பெயர் வைத்தார். இருந்தாலும், வேத மந்திரங்களில் சொல்லப்பட்ட பல்வேறு பெயர்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி பீஷ்மாச்சாரியார் துதி செய்தார். அந்தத் துதி கண்ணனின் முன்னிலையிலேயே நடைபெற்றது. “பரமாத்மாவின் நாமங்களான விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வதால் சகல புகழையும் நீ அடைவாய்” என்று ஆசீர்வதித்தார் பீஷ்மர்.

இந்த பீஷ்மர் யார் என்று பார்க்க வேண்டும். பூர்வத்தில், அஷ்ட வசுக்களில் ஒருவராக இருந்தவன் பிரபாசன். ஒரு சிறிய தவறினால் வசிட்ட மகரிஷியால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் சந்தனு மகாராஜாவின் பிள்ளையாக – கங்கா தேவிக்கு மகனாகப் பிறந்தார். தேவவிரதன் என்ற பெயரோடு பூர்ணமான பிரம்மச்சரிய விரதத்தை, தன்னுடைய தந்தையின் மன மகிழ்ச்சிக்காக, சபதம் செய்து கடைப்பிடித்தார். யாராலும் செய்ய முடியாத சபதத்தை செய்தவன் என்கிற பொருளில், பீஷ்மர் என்கிற நாமத்தைப் பெற்றார். சகல வேதங்களின் கருத்தை நன்கு உணர்ந்த அவர், பகவான் கண்ணனிடம் அத்யந்த (அளவில்லாத) பக்தி கொண்டிருந்தார்.

அதனால்தான், அவருடைய வாக்கு பொய்யாகக் கூடாது என்று, தான் பொய்யனானான் கண்ணன்.பாரதப் போரில் எந்த ஆயுதத்தையும் எடுக்க மாட்டேன் என்று சொன்ன கண்ணன், தன்னுடைய வாக்கு பொய்யானாலும் தன்னுடைய பக்தனாகிய பீஷ்மரின் வாக்கு பொய்க்கக் கூடாது என்பதற்காக, சக்கரம் எடுத்துக் கொண்டு பீஷ்மரைக் கொல்வதற்காகப் பாய்ந்து வந்தார். அப்பொழுது ஆயுதங்களை எல்லாம் போட்டுவிட்டு கண்ணனைத் துதி செய்தார் பீஷ்மர். முன்பொரு முறை தர்மபுத்திரன் அஸ்வமேதயாகம் செய்தான். நிறைவாக முதல் தாம்பூலம் யாருக்குத் தர வேண்டும் என்று கேட்டபோது, பீஷ்மர், ‘‘பகவானாகிய கண்ணன் இங்கு அவையில் அமர்ந்திருக்கும் போது வேறு யாருக்குத் தர முடியும்?” என்று பகவான் கண்ணனை பூஜைசெய்யச் சொன்னார்.

இவ்வளவு பெருமை பெற்ற பீஷ்மாச்சாரியார் செய்த விஷ்ணு ஸகஸ்ரநாமத்திற்கு இணையாக ஒரு நூலைச் சொல்ல முடியாது. அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மூன்று மதாச்சார்யர்களும் பரிபூரணமாக அனுஷ்டித்தனர். இன்றைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நூலை தினசரி பிரார்த்தனை நூலாக பயன்படுத்துகின்றனர். மிக நீண்ட ஆயுள், ஐஸ்வர்யம், நோய்களிலிருந்து விடுதலை, எனப் பலப் பல நன்மைகளைச் செய்வது விஷ்ணுஸகஸ்ர நாமம்.

ஒருவன் ஆபத்துக் காலத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்தால், அந்த ஆபத்து மிக எளிதாக நீங்கி விடுகிறது என விஷ்ணு சகஸ்ர நாமத்தின் ஒரு ஸ்லோகம் சொல்லுகின்றது. விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மிக முக்கியமான சிறப்பை பரமசிவன், பார்வதிக்கு உபதேசித்தார் என்பதையும் பார்க்கிறோம். தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில் ஒருவர் விஷ்ணு சகஸ்ர நாமத்தை தினசரி பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

விஷ்ணு சகஸ்ர நாமத்தை உயிராக நேசித்தார். முழு ஈடுபாட்டோடும் பக்தியோடும் தினசரி பாராயணம் செய்வார். செய்து முடிக்கும் வரை உணவு உட்கொள்வது இல்லை. அவருக்கு ஒரு மகள் இருந்தாள். மகள் வளர்ந்தவுடன் அவளுக்கு ஒரு திருமணத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத் திருந்தார். ஒரு நாள், அவர் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் அந்தப் பெண்ணை பாம்பு கடித்துவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பதறிப் போய்ப் பார்த்தபோது, மூர்ச்சையாகி இருந்தாள். அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டு, அவளுடைய உடலை வெளி வாசலிலே கொண்டு வந்து போட்டு அழுது கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் வெளியூர் போயிருந்தவர் திரும்பி வந்து தன் வீட்டில் நடந்து கொண்டிருந்த அவலங்களைப் பார்த்துத் துடித்துப் போய்விட்டார்.

தன்னுடைய மகளைப் பார்த்துக் கண்ணீர்விட்டு கதறினார். சற்று நேரத்தில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன்னுடைய மகளின் உடலின் முன்னால் அமர்ந்து கண்ணீர் மல்க விஷ்ணு சஹஸ்ர நாமத்தை நம்பிக்கையோடு சில ஆவர்த்திகள் பாராயணம் செய்தார். என்ன அதிசயம்! சற்று நேரத்தில் அந்தப் பெண் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்தாள். பார்த்தவர்கள் எல்லாம் மகிழ்ந்தனர். வேதவித்தாக விளங்கிய  வெங்கடேசதீட்சிதர், ஒருமுறை மும்பையில் கதை சொல்லும்போது, விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை சொல்லிக் கொண்டிருந்தார். இந்த அதிசயக் கதையை அப்போது உருக்கமாக விவரித்தார். மக்கள் கண்ணீரோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்தச் சபையில் இருந்து நடுத்தர வயதுடைய பெண் ஒருத்தி எழுந்து கதறிக் கொண்டே வெங்கடேச தீட்சிதரிடம் வந்தாள். “மாமா நீங்கள் சொல்லுகின்ற அந்தப் பெண் நான்தான்” என்றாள். விஷ்ணுசகஸ்ர நாமத்தின் பலனுக்குச் சாட்சியாக நின்ற அவளைக் கண்டு, சபையோர் வியந்தனர். ‘‘ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத்! பயாந் முச்யேத பீதஸ்து முச்யேதபந்த ஆபத:’’ என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒரு சுலோகம் உண்டு. விஷ்ணு சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்தால், நோய் நீங்கிவிடும். பந்தம் நீங்கி மோட்சம் கிடைக்கும். ஆபத்துக்கள் அணுகாமல் காக்கும் என்பது விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பலன்.

இன்றைய காலக்கட்டத்தில், எவ்வளவோ தீராத கொடுமையான வியாதிகள் ஏற்பட்டு நம்மில் பலரும் சிரமப்படுகிறோம். நோய்வாய்ப்பட்டு பல நாட்கள் ஆஸ்பத்திரியிலோ வீட்டிலோ படுத்த படுக்கையாகிறோம். எவ்வளவோ பணம் செலவழித்து, வைத்தியமும் பார்க்கிறோம். வைத்தியம் செய்து கொள்வதோடு, இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தையும், முழு நம்பிக்கையுடனும், பக்தி ஸ்ரத்தையுடனும், மனதை ஒருமுகப்படுத்தி, தொடர்ச்சியாக தினம் 21 முறைகள் வீதம் 30 நாட்களுக்குச் சொல்லி, 31 ஆவது நாள் பாக்கி 2 தடவைகள் சொல்லி [ஆகமொத்தம் 632 ஆவர்த்தி] பூர்த்திசெய்ய வேண்டும். கைகால் அலம்பிக்கொண்டு, விளக்கேற்றி வைத்துவிட்டு, வடக்கோ அல்லது கிழக்கோ நோக்கி அமர்ந்து கொண்டு, சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமே! மணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைப்பிடித்து வந்தார்கள்!

இதனை மூன்று மதாச்சார்யார்களும் விரிவுரை செய்திருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத்பாதாள் அத்வைத பரமாக இதற்கு ஒரு உரையை எழுதி இருக்கிறார். முதல் முதலில் அவர் “லலிதா சகஸ்ரநாமம்’’ என்கிற நூலுக்கு உரை எழுதுவதற்காகப் புத்தகத்தை எடுத்ததாகவும், அப்பொழுது ஒரு பெண் திரும்பத் திரும்ப விஷ்ணுஸகஸ்ரநாம நூலைத்தந்து இதற்கு உரை எழுத வேண்டும் என்று கேட்டதாகவும் சொல்லுகின்றார்கள்.

எது எப்படியிருந்தாலும், ஆதிசங்கரர் முதலில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு உரை எழுதினார் என்பது முக்கியம். அதைப் போலவே மத்வ மதத்தைச் சேர்ந்த ஸ்ரீஆனந்த தீர்த்தர், விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு ஒரு உரையை எழுதினார். ராமானுஜர், சீடர் கூரத்தாழ்வானின் புதல்வராகிய பராசரபட்டர், “பகவத் குண தர்ப்பணம்’’ என்றொரு விளக்கத்தை விஷ்ணு சகஸ்ரநாமத்திற்குச் செய்தருளினார். இதுதவிர எண்ணற்றவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு உரை அருளிச் செய்திருக்கிறார்கள். தை மாதம் வருகின்ற பீஷ்ம அஷ்டமியில், அவர் அளித்த விஷ்ணு சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்து, நாம் பலப் பல நன்மைகளை அடைவோமாக.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும் appeared first on Dinakaran.

Tags : Bhishmacharya ,Vishnu Sakasranam ,India ,Vedavyasa ,Vedas ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...