×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

எண்ணித் துணிக யோகம்!

நோயில்லாதவன் மருந்து சாப்பிட்டால் நோய் வந்து சேருமென்பது நமக்கே தெரிந்த விசயம்தான். அப்படித்தான், தனக்கு சரிப்பட்டு வராத ஒன்றை, அல்லது அவசியமில்லாத ஒன்றைத் தேர்வு செய்வதும் நிச்சயமாக எதிர்நிலை பலனையோ, பின்விளைவுகளையோ உண்டாக்கக்கூடியதே. இது நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து, அணியும் உடை, எண்ணும் எண்ணங்கள் வரை நமது அனைத்துத் தளங்களிலும் நிகழக்கூடியது. உதாரணமாக, சர்க்கரைநோய் என்பது ஆபத்தானது. எனவே அந்த நோய் வருவதற்கு முன்னர் நாம் பாதுகாப்பாக இருக்க எண்ணி, ‘மெட்பார்மின்’ போன்ற வெறும் முப்பது ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய மாத்திரையை ஒருவர் உட்கொள்ள தொடங்கினால், அது நிச்சயமாக ரத்தத்தின் சர்க்கரை அளவில் பெரிய எதிர்வினையை உண்டு பண்ணி, மோசமான நோயை உருவாக்கும் என்பது நிதர்சனம்.

இப்படித்தான் நமக்கானது எது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் சவாலான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்கிறோம். ஆகவே, நமக்கான ஒன்று கிடைக்கும் வரை பல்வேறு விஷயங்களை நுகர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். மேலும், இன்று நாம் நுகர்வதற்காக நம்மை சுற்றி எல்லா வகையிலும் எல்லாவிதமானவையும் கொட்டிக்கிடக்கின்றன. இதிலிருந்து குறைந்த அளவில் நுகர்தலும், அதன் மூலம் நிறைந்த பலனை அடைவதுமே, இன்றைய தேவை.

அப்படித்தான் யோக பயிற்சிகளையும் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நமது மரபார்ந்த யோக நூல்களும், சம்ஹிதைகளும் வெறும் எண்பத்தி நான்கு பயிற்சிகளையே முன்வைத்தன. எனினும் அவை காலத்தால், பல்கிப் பெருகி, இன்று ஆசனங்கள் மட்டுமே நான்காயிரம் என உயர்ந்திருக்கின்றன. இதில் சிகிச்சைக்கு உகந்தவை எவை? ஆரோக்யமான அன்றாடத்திற்கானவை, எவை? உளம் சார்ந்த பயிற்சிகள் எவை? என்பன குறித்த தெளிவு மிகவும் அவசியமானது.

அப்படி ஒரு பாடத்திட்டதைத் தேர்ந்தெடுக்க முதலில் நமது உடலின் தன்மை, உளம் இயங்குமுறை, உணர்ச்சிகளின் முந்தைய மற்றும் தற்போதைய நிலை என பல அடுக்குகளை ஓரளவேனும் உணர்ந்த பின் தேர்ந்தெடுத்தால், கால விரயமின்றி, முழுப்பலனையும் அடையலாம். ஆயுர்வேதத்தின் உடலியலும், உயிராற்றல் இயங்கும் முறையும் குறித்து சொல்லப்படும் கருத்துக்களை ஒட்டியே யோக மரபு தனக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்து வைத்திருக்கிறது.

அதன்படி நமக்கு ஏற்கெனவே தெரிந்த அடிப்படைகளான வாதம் பித்தம், கபம் எனும் மூன்று தோஷங்களும், அதற்கான தீர்வுகளும் அதை முக்கியமாகக் கொண்ட பயிற்சிகளும் அவசியம் என்பதால் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் வாத பிரக்ருதி என்று சொல்லக்கூடிய வாதத்தின் தன்மையால் கட்டமைக்கப்பட்ட உடலை உடைய ஒருவர், பெரும்பாலும் செயல்பட்டுக்கொண்டும், பதற்றத்துடனும், ஒய்வின்றியும், காற்றைப்போல சதா இங்குமங்கும் அலைந்துகொண்டும் இருக்கக்கூடியவர். ஒல்லியான உடல்வாகும், மனத்தளவிலும் அலைச்சல் மிக்கவராகவுமே இருப்பார்.

இப்படியான ஒருவருக்கு மூட்டுப்பகுதிகள், இணைப்புகள் எனப் படிப்படியாக வலி எடுக்கத் தொடங்கி, தூக்கமின்மை, உடலில் ஆற்றலின்மை என வயதாக வயதாக ஒவ்வொன்றாகத் தொல்லை தரும். ஆக அப்படியான ஒருவர் அதிகபட்சம் மத்திய வயதிலாவது தனக்கான ஒரு பாடத்திட்டத்தைக் கண்டடைய வேண்டும். அது வாத தோஷத்தை சமன் செய்யக்கூடியதாகவும், மற்ற இரண்டு தோஷங்களைச் சரியாக நிர்வகிக்கக்கூடியதாகவும் இருத்தல் அவசியம்.

வாதபிரக்ருதிகள் சுவாசத்தில் குறைபாடுள்ளவர்களாக இருப்பதை காணமுடிகிறது. நுரையீரலின் சிறு பகுதிக்குக்கூட அவர்களுடைய மூச்சுக்காற்று செல்வதில்லை. அரைகுறையாகவோ, வேகமாகவோ, சற்று திணறலுடனோதான் இவர்களுடைய மூச்சின் தன்மை இருக்கும். ஆக அவர்களுக்கான பயிற்சிகள் சுவாசத்தை மையமாகக் கொண்டதாகவும், மூச்சினை உள்ளிழுத்தல், வெளியிடுதல், தேக்கி வைத்தல் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதாகவும் இருக்கும்.

இவர்களுடைய மூச்சின் கொள்ளளவை கொண்டே ஆசனப் பயிற்சிகளையும் வடிவமைக்க வேண்டும். மூச்சுடன் இணைந்ததாகவும், நீண்ட மூச்சாகவும் இருக்க வேண்டும். நிறுத்த வேண்டிய இடமும், கால அளவும் அதனுடன் இணைக்க வேண்டிய அசைவுகளும் தெரிய வேண்டும். விரைவின்றியும், உடலை தளர்வாக வைத்தும், காற்றில் அசையும் ஒரு நடனம் போல வாத உடல்வாகு கொண்டவர்களுக்கான பயிற்சிகள் அமையும். ஆகவே, ஓரளவேனும் அடிப்படை மருத்துவமும், யோகமும் தெரிந்த ஒருவரால் அல்லது மரபால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைத் சேர்ந்த ஒருவரால் கற்றுக்கொடுக்கப்பட நலம் விளையும்.

அடுத்ததாக பித்த பிரக்ருதிகள் எனும் உஷ்ணமான உடல் தன்மை கொண்டவர்களுக்கான பாடத்திட்டம். இவர்கள் சதா இயங்கிக்கொண்டும், திட்டமிட்டுக்கொண்டும், சமூகத்தை தன் பால் ஈர்க்கும் மனநிலையிலும், செயலும் , ஊக்கமும் அதற்கிணையான கொந்தளிப்பும், அமைதியின்மையும் கொண்டவர்கள். இவர்கள் பெரும் லட்சியமும் கனவுகளும் கொண்டிருப்பவர்கள். அதை முடிப்பவர்கள். ஆகவே, இவர்களுக்கான பயிற்சிகள் சமநிலை கொண்டதாகவும் அதீதமான அசைவுகளற்றதாகவும், அதே வேளையில் இவர்களுடையத் தத்தளிப்பின் தருணங்களில் முழுவதுமாக உதவக்கூடியதாவும் அமைந்திருத்தல் அவசியம்.

ஆகவே, சுவாசம் சமநிலையில் இருக்கும் பயிற்சிகளும், உடல், உள்ளம் இரண்டையும் இணைக்கும் ஒத்திசைவுடன் கூடிய பயிற்சிகளும் ,அதனையொட்டிய மூச்சுப்பயிற்சியும், தியான முறைகளும் இணைந்த ஒரு பாடத்திட்டம் தேவையாகிறது. இவர்களுடைய தியான அனுபவமென்பது படிப்படியாக அமையவேண்டிய ஒன்று. ஆகவே, பதஞ்சலி சொல்லக்கூடிய பிரத்யாஹாரம், தாரணை, தியானம் எனும் அனைத்தும் படிப்படியாகக் கற்றுத் தேற வேண்டும்.

உளக்கொந்தளிப்பு, உடல் கொண்ட கொந்தளிப்பு என இரண்டு நிலைக்கும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் பயிற்சிகள் அமைய வேண்டும். அதே போலப் பயிற்சிக்கான காலம் மிகவும் முக்கியமான ஒன்று. இவ்வகை உடல் தன்மை கொண்டவர்கள் பகல் பொழுதில் பயிற்சிகளைத் தவிர்க்கலாம், இவர்களுக்கான சரியான பயிற்சிக் காலம் என்பது அதிகாலை முதல் காலை எட்டு மணி வரை. சில ஆசனப் பயிற்சிகள் உடலை மேலும் சூடாக்கக்கூடியது என்பதால் அவ்வகைப் பயிற்சிகளைத் தவிர்க்கலாம். இவ்வகை உடல் கொண்டவர்கள் மிகுந்த விழிப்புணர்வும், அதற்கிணையான பயமும், தர்க்கமும் கொண்டவர்கள் என்பதால், தியானப்பயிற்சிகளும்கூட ஒரு தேர்ந்த ஆசிரியரால் வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக கபதோஷம் எனும் நீரின் தன்மையால் ஆனவர்களுக்கான பாடத்திட்டம். இவர்கள் பெரும்பாலும் போதிய உடலுழைப்பு இல்லாதவர்களாகவும் , சுறுசுறுப்பின்மை, சோம்பிக்கிடத்தல், அதிக உறக்கம், அல்லது ஓய்வுநிலையில் இருத்தல், மெதுவாக செயல்படுதல், என உடலளவிலும், நல்ல நினைவாற்றல், திடமான மனம், புத்திக்கூர்மை என உள்ளத்தளவிலும் இருப்பர். இவர்களுக்கான பயிற்சிகள் சற்று துரிதமானதாகவும், அதே வேளையில் மூச்சின் ஒருங்கிணைப்பும் மிகவும் முக்கியம்.

முதல் சில மாதங்கள் துரிதமான பயிற்சிகளைச் செய்வதில் ஆர்வமில்லாமலும், உடல் அதற்கு ஒத்துழைக்க மறுப்பதும் நிகழும். அந்தக் காலகட்டத்தில் உடலை தீவிரப் பயிற்சிக்கு உந்தக்கூடிய முதல் கட்ட பாடத்திட்டம் ஒன்று இருக்க வேண்டும். அதில் ஆசனங்கள் மட்டுமின்றி, முத்திரைகள், அடிப்படை தியானங்கள், மூச்சுப்பயிற்சிகள் என அனைத்தும் அமைய வேண்டும். மற்ற இரண்டு வகை உடல்வாகு கொண்டவர்களைவிட கபத்தன்மை கொண்டவர்களைப் பயிற்சிக்கு உட்படுத்துவதுதான் மிகவும் சவாலானது. எனினும் மற்ற இருவரைவிட இவர்களுக்கே எளிதில், விரைவாகவும் பலன்களை அடையும் சாத்தியமுண்டு.

நமக்குப் பிடித்த பயிற்சிகள் அல்லது யாரோ ஒருவர் சொன்ன பயிற்சிகள், அல்லது ஒரு குறிப்பிட்ட பலனுக்காக மட்டும் சொல்லப்படும் பயிற்சிகள் என ஏதேனும் ஒன்றைத் தவறுதலாகத் தேர்வு செய்வதற்கு பதிலாக, நம்மை பற்றி ஓரளவேனும் முழுமையாகத் தெரிந்த ஆசிரியர் அல்லது அறிவியலும், நவீனமும், மரபும் இணைத்து பார்க்கக்கூடிய பாடத்திட்டம் கொண்ட ஒரு அமைப்பில், நமக்கே நமக்கான பிரத்யேகமான பாடங்களைக் கற்றுக்கொள்வதும் அதில் தீவிரமாக ஈடுபடுவதும் அதன்மூலம் இப்போது இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதும், மீண்டும் மீண்டும் இப்படியான சூழலில் சிக்காமலிருப்பதும்தான் ‘யோக சாதனா’ எனப்படுகிறது. ஆகவே, ஒரு செயலை தொடங்குமுன் தீவிரமாக அது குறித்து எண்ணித் திட்டமிட்டுத் துணிந்து செய்வதே சிறப்பு. அப்படி எண்ணாமல், துணியாமல் செய்யும் செயல்கள் மேலும் சிக்கலையே வரவழைக்கும் எனும் வள்ளுவன் வாக்கு ‘கருமம்’ எனும் செயலுக்கு மட்டுமல்ல யோகத்துக்கும்தான்.

பரத்வாஜ ஆசனம்

இந்தப் பகுதியில் நாம் பரத்வாஜ ஆசனம் பற்றி பார்க்கலாம். வயிற்றுப்பகுதியில் நிலவும் இறுக்கத்தைப் போக்கவும், நல்ல செரிமானத்துக்கும் உதவக்கூடிய இந்தப் பயிற்சி, ஏழு வகைகளில் செய்யப்படுகிறது. வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் எனும் அமர்ந்த நிலைகளில் இதைச் செய்து பலனடையலாம்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Yoga ,Selandararajan.ji ,Ennitaka ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?