×

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கூகுள் மேப் காட்டிய மாற்றுப்பாதை: சிக்கிக்கொண்ட கார்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. இந்த மாநிலங்களில் இருந்து வரும், சுற்றுலா பயணிகள், கூடலூர் பகுதி வழியாக உதகை போன்ற பிற சுற்றுலாத் தலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், 3 நாள் தொடர் விடுமுறையையொட்டி தங்களது சொகுசு கார் மூலம் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

சுற்றுலாவை முடித்துவிட்டு, பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ‘கூகுள் மேப்’ உதவியுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அதன்படி, கூடலூர் அருகே வரும் போது, ‘கூகுள் மேப்’ காட்டிய வழியில் திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தினார்.

அதன் பின்னர், கார் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி ஊர்மக்கள் உதவியை நாடியுள்ளார். இதையறிந்து உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் பிற சுற்றுலா பயணிகள் அங்கு வந்து, காரை மீட்க முயற்சி செய்தனர். ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு படிக்கட்டுகளில் கற்களை அமைத்து அந்தக் காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது குறித்து பேசிய கூடலூர் காவல்துறையினர், ” தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கேரளா மற்றும் கர்நாடகா வாகனங்களின் வருகையும் அதிகமாக இருந்ததால் கூடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலைத் தவிர்த்து வேகமாக கூடலூர் சாலையை அடைய முயன்ற சுற்றுலா பயணிகள் கூகுள் மேப்பைப் பின்தொடர்ந்து நடைபாதை படிக்கட்டில் சிக்கியிருந்தனர். இயக்க முடியாதபடி 50 மீட்டர் நீளமுள்ள படிக்கட்டுகள் நிறைந்த பாதையில் சிக்கிய காரை மீட்டு அனுப்பி வைத்தோம். வேறு வாகனங்கள் இந்த சாலையில் சிக்காமல் தடுக்க அறிவிப்பு பதாகை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் ” என்றனர்.

The post போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கூகுள் மேப் காட்டிய மாற்றுப்பாதை: சிக்கிக்கொண்ட கார்! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Kudalur region ,Tamil Nadu ,Kerala ,Karnataka ,Utkai ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு