×

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அடுத்த 7 நாட்களில் சிஏஏ சட்டம் அமல்: ஒன்றிய அமைச்சர் திடீர் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கம் மட்டுமல்ல நாடு முழுவதும் அடுத்த 7 நாட்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மேற்குவங்க மாநிலம் தெற்கு பர்கானாசில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசுகையில், ‘கடந்த ஆண்டு டிசம்பரில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்றார்.

அதனால் அச்சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. சிஏஏ குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார். லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பே குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வரும். எனவே, நாடு முழுவதும் அடுத்த ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும்’ என்றார். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தப்பட்ட சட்டத்தின்படி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்கள் (இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்) சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்.

அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இந்த சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுவதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டில், சிஏஏவுக்கு எதிராக மேற்குவங்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதேபோல் மேலும் சில மாநிலங்கள் சிஏஏவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றின. மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அடுத்த 7 நாட்களில் சிஏஏ சட்டம் அமல்: ஒன்றிய அமைச்சர் திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CAA ,Lok ,Sabha ,Union ,Minister ,Kolkata ,Union Minister ,Shantanu Thakur ,West Bengal ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...