×

பிப்ரவரி 9ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக

சென்னை: பிப்ரவரி 9ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை ஆலோசனை நடத்தினர்.

அதில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பது, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசித்தனர். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர்.

அவர்களை வாசல் வரை வந்து திமுகவினர் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு, குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது. இந்நிலையில் பிப்ரவரி 9ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் தமிழக குழுவினர் பங்கேற்ற நிலையில், 9ம் தேதி தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர். விருப்ப தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் கொடுத்துள்ள நிலையில், மற்ற கட்சிகளோடு ஆலோசனை நடத்திய பின், 9ம் தேதி காங்கிரசுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறது.

The post பிப்ரவரி 9ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Chennai ,Congress party ,Madhyamik ,Liberation Tigers of India ,CPM ,CBI ,Indian Union Muslim League ,Mamaka ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி