×

விவசாயத்தை பாதுகாக்க மாற்றுப்பயிர் குறித்த விழிப்புணர்வு அவசியம்

தேனி, ஜன. 29: மாவட்டத்தில் குறைந்த நீர் தேவையுள்ள மாற்றுப்பயிர் விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. அதிக நீர் தேவையுள்ள பயிர்களான நெல், கரும்பு உள்ளிட்டவைகளை பயிரிட்டு விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

சில விவசாயிகள் மாற்று விவசாயமாக மரவள்ளி, சக்கரைவள்ளி, கருணைக்கிழங்கு விவசாயம், காளான் உற்பத்தி உள்ளிட்டவைகள் செய்து அதில் லாபம் அடைந்து வருகின்றனர். மரவள்ளிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு அதிகமான நீர் பாய்ச்ச தேவையில்லை. இதுபோல் காளான் வளர்ப்புத் தொழிலையும் லாபகரமானதாய் செய்துவருகின்றனர். இவைகள் மட்டுமின்றி நீர் குறைவாக பயன்படுத்தப்படும் மானாவாரி மாற்றுப்பயிர்கள் பயிர் செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், நீர் ஆதாரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றுப்பயிர் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

விவசாய ஆர்வலர் ஒருவர் கூறியதாவது,‘தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. மழை பெய்யவில்லை, போதிய நீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை, இதனால் லாபமில்லை என்பதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. நீர் தேவை குறைவான பயிர்களே இம்மாவட்டத்திற்கு ஏற்றதாகும். அதுபோன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிட்டால் நஷ்டம் ஏற்படாது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட மழை குறைவான மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையால் மானாவரி பயிர்கள் பயிரிடப்படுகிறது. மாற்று விவசாயம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்றார்.

The post விவசாயத்தை பாதுகாக்க மாற்றுப்பயிர் குறித்த விழிப்புணர்வு அவசியம் appeared first on Dinakaran.

Tags : Theni ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்